
தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்ட 1.5 கோடி ரூபாய் மதிப்புடைய சுவாமி சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் மற்றும் ஏ.டி.ஜி.பி. பிரதீப் வி.பிலிப் ஆகியோர், தமிழகத்தில் சோழர் காலத்து சிலைகள் அதிகளவில் திருடப்பட்டுள்ளதாகக் கூறினர். தொடர் விசாரணை மூலம் இங்கிருந்து கடத்தப்பட்டு, ஆஸ்திலேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட 1.5 கோடி ரூபாய் மதிப்புடைய நரசிம்மர் கற்சிலை மீட்கப்பட்டுள்ளது என்றனர்.
விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வர் கோயிலில் இருந்து கடந்த 2002 ஆம் ஆண்டு இந்த சிலை திருடப்பட்டதாகத் தெரிவித்த அதிகாரிகள், நரசிம்மர் சிலைக்குப் பதிலாக, வேறு சிலையை செய்து கடத்தல்காரர்கள் கோயிலில் வைத்து விட்டுச் சென்றதாக் கூறினர்.
சுமார் 1,040 ஆண்டுகள் பழமையான இந்தக் கற்சிலை கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் சிலை, பாதுகாப்பு மையத்தில் வைக்கப்படும் என்றும், சிலை திருட்டைத் தடுக்க தமிழக கோயில்சிலைகள் அனைத்தும் ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் வீட்டில் இருந்து சோழர் காலத்தைச் சேர்ந்த பல கோடி ரூபாய் மதிப்புடைய 100க்கும் மேற்பட்ட சிலைகள் அண்மையில் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.