ஐஐடி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம்... விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி!!

By Narendran SFirst Published Apr 25, 2022, 5:30 PM IST
Highlights

ஐஐடி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணையை தொடங்கியுள்ளது. 

ஐஐடி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணையை தொடங்கியுள்ளது. சென்னை ஐஐடியில் படித்து வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த மாணவி, தன்னுடன் பயின்ற சக ஆராய்ச்சி மாணவன் கிங்ஷீக்தேவ் சர்மா என்பவரால் கடந்த 2017ம் ஆண்டு பாலியல் தொந்தரவுக்கு ஆளானார். மேலும், தன்னுடைய நண்பர்களான சுபதீப் பேனர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ ஆகியோருடன் சேர்ந்து மாணவியை மிரட்டி தொடர் கூட்டு பாலியல் தொந்தரவும் கொடுத்துள்ளனர். உடனே, பாதிக்கப்பட்ட மாணவி, தனது பேராசிரியர் எடமன் பிரசாத்திடம் புகார் செய்தார். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனவேதனையடைந்த மாணவி, 3 முறை தற்கொலைக்கு முயன்றார்.பின்னர் வேறு வழியின்றி கடந்த 2021, மார்ச் 29ம் தேதி தேசிய மகளிர் ஆணையத்திலும், கோட்டூர்புரம் காவல் நிலையத்திலும் மாணவி புகார் செய்தார். பாலியல் புகார் என்பதால் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து, கிங்ஷீக்தேவ் ஷர்மா, சுபதீப் பேனர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ, டாக்டர் ரவீந்திரன், எடமன பிரசாத், நாராயண் பத்ரா, செளர்வ தத்தா, அய்யன் பட்டாசார்யா ஆகிய 8 பேர் மீது ஐபிசி 354, 354(பி), 354(சி), 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் 9 மாதங்களாகியும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், இந்த வழக்கை கையில் எடுத்து அழுத்தம் கொடுத்தது. பின்னர் முன்னாள் மாணவன் மீது எஸ்சி, எஸ்டி வழக்கு மற்றும் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைதொடர்ந்து மயிலாப்பூர் துணை கமிஷனரின் தனிப்படை போலீசார், மேற்கு வங்கம் டைமண்ட் ஹார்பர் மாவட்டம் ராயல்நகரில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளி கிங்ஷீக் தேவ் சர்மாவை கடந்த 28ம் தேதி கைது செய்து டைமண்ட் ஹார்பர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டிரான்சிட் வாரண்ட் வாங்க முயன்றனர்.

அப்போது, மாவட்ட நீதிமன்றம், இந்த வழக்கில் கிங்ஷீக் தேவ் சர்மா முன் ஜாமீன் வாங்கி உள்ளதால் அவரை தனிப்படை போலீசாரிடம் இருந்து விடுவித்து உத்தரவிட்டது. இதனால் இந்த வழக்கில் போலீசாருக்கு பின்னடைவு ஏற்பட்டது. அதேநேரம் பாலியல் வழக்கில் தொடர்புடைய 2 ஐஐடி பேராசிரியர்கள், உயர் நீதிமன்றத்தில் நிபந்தனைகளுடன் முன் ஜாமீன் பெற்றனர். ஐஐடி மாணவி பாலியல் வழக்கில் அடுத்தடுத்த மர்மங்கள் நீடித்து வந்ததால் இந்த வழக்கு சென்னை மாநகர காவல்துறையில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதைதொடர்ந்து சிபிசிஐடி டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் ஐஐடி மாணவி பாலியல் வழக்கை விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து இந்த வழக்கின் விபரங்கள் அடங்கிய கோப்பை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் சிபிசிஐடி டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் விசாரணையை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக புகார் அளித்த மாணவியிடம் விசாரணையை தொடங்கியது.

click me!