சூதாட்ட கப்பலை புதுச்சேரிக்குள் நுழைய விடக்கூடாது.. புதுச்சேரி ஆளும் கூட்டணி அதிமுக கடும் எதிர்ப்பு..

By Thanalakshmi VFirst Published Jun 5, 2022, 3:34 PM IST
Highlights

தமிழகத்திலிருந்து வரும் சூதாட்ட கப்பலை புதுச்சேரிக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது என்று ஆளும் கூட்டணியைச் சேர்ந்த அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
 

புதுவை கிழக்கு மாநில அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஆன்மிக பூமியாக திகழும் புதுவையின் புகழை சீர்குலைக்கும் வகையில் கேசினோ சூதாட்ட கப்பலுக்கு தமிழக திமுக அரசு அனுமதியளித்துள்ளது. தேர்தலுக்கு உதவிய கோவையை சேர்ந்த லாட்டரி தொழிலதிபருக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் இந்த கப்பலுக்கு தமிழக திமுக அரசு அனுமதியளித்துள்ளது.

இந்த தனியார் கப்பல் பயணத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். உல்லாச பயணம் என்ற போர்வையில் இயக்கப்படும் கப்பலில் மக்களின் உழைப்பை உறிஞ்ச பல்வேறு கேசினோ சூதாட்டங்கள்தான் பிரதானமாக இடம் பெற்றுள்ளது. சென்னையிலிருந்து புறப்படும் கப்பல் புதுவை உப்பளம் துறைமுகத்துக்கும் வர உள்ளது. புதுவையில் பயணிகளை ஏற்றி, இறக்கவும் திட்டமிட்டுள்ளனர். வரும் காலத்தில் புதுவையில் இருந்து சென்னைக்கு இந்த கப்பலை இயக்க தீர்மானித்துள்ளனர். இதனை அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

கேசினோ சூதாட்டங்கள் புதுவை இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும். பல குடும்பங்கள் பணத்தை தொலைத்து நிர்கதியாக தெருவில் நிற்கும் அவலம் ஏற்படும். பல குடும்பத்தினரை தற்கொலைக்கு தூண்டும். மக்கள் நலன் ஒன்றே குறிக்கோள் என்ற எண்ணத்தோடு ஜெயலலிதா லாட்டரியை தமிழகத்தில் வேரோடு அழித்தார்.

அவர்களின் வழியை பின்பற்றி ஆட்சி நடத்திய கழகத்தின் இருபெரும் தலைவர்களும் லாட்டரியை ஒழித்ததோடு, ஆன்லைன் சூதாட்டத்தையும் தடுத்து நிறுத்தி, இளைய சமுதாயத்தை காப்பாற்ற தமிழக சட்டசபையில் சட்ட மசோதாவை நிறைவேற்றினர். ஆனால் தற்போது பொய் வாக்குறுதிகளால் ஆட்சியை பிடித்துள்ள தமிழக திமுக அரசு, மக்களின் நலனைப்பற்றி கருதாமல், சுயநல நோக்கோடு, சிலர் மட்டும் ஆதாயம் பெரும் எண்ணத்தோடு கேசினோ எனும் சூதாட்ட கப்பலுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த சூதாட்ட கப்பலை புதுவைக்குள் அனுமதிக்க மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளது, வருங்கால சந்ததிகளுக்கு பேராபத்தை விளைவிக்கும். இந்த கப்பலை புதுவைக்குள் நுழைய அனுமதிக்க கூடாது. எந்த ரூபத்திலாவது மக்களின் உழைப்பை சுரண்டி பிழைக்க வேண்டும் என எண்ணும் கூட்டத்தின் எண்ணங்களை தவிடுபொடியாக்க வேண்டும். புதுவைக்குள் இந்த கப்பலை நுழைய அனுமதித்தால் அதிமுக கடுமையாக எதிர்க்கும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: அடகு வைத்த நகையை எடுத்து பலே மோசடி.. அலேக்கா சிக்கிய நகை மதிப்பீட்டாளர், செயலாளர் சஸ்பெண்ட்..

click me!