அடகு வைத்த நகையை எடுத்து பலே மோசடி.. அலேக்கா சிக்கிய நகை மதிப்பீட்டாளர், செயலாளர் சஸ்பெண்ட்..

By Thanalakshmi VFirst Published Jun 5, 2022, 2:55 PM IST
Highlights

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் அடகு வைக்கப்பட்ட தங்க நகையை எடுத்து தனியார் வங்கியில் அடகு வைத்த சங்கத்தின் செயலாளர், நகை மதிப்பீட்டாளர் ஆகிய இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
 

புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அருகே நல்லூரில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. நல்லூர், நெறிஞ்சிக்குடி, வாழைக்குறிச்சி, கூடலூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள், சுய உதவிக்குழுவினர் உள்ளிட்டோர் இதனை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இங்கு 800-க்கும் அதிகமானோர் தங்க நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், விவசாயி கிருஷ்ணன் என்பவர் கூட்டறவு சங்கத்தில் தான் அடகு வைத்திருந்த நகையை திருப்ப சென்றிருக்கிறார். ஆனால் அவரது நகைக்கு பதிலாக வேறொரு நகையை அதிகாரிகள் கொடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல், இதுக்குறித்து வெளியில் யாரிடம் கூற வேண்டாம் என்றும் கூட்டுறவு சங்கத்தினர் அவரிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. 

ஆனால் விவசாயி கிருஷ்ணன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், நல்லூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் அடகு வைத்திருந்த தனது நகை மாயமாகிவிட்டதாகவும் இதுபோன்ற அடகு வைத்திருக்கும் அனைவரும் சங்கத்திற்கு சென்று சரிப்பார்த்துக்கொள்ளுமாறு பதிவிட்டுள்ளார். இந்தத் தகவலைத் தொடர்ந்து, கூட்டுறவு சங்கத்திற்கு படையெடுத்த மக்கள்,கூட்டுறவு சங்க அலுவலகத்திலும் புகார் அளித்தனர். 

இதனையடுத்து கடந்த 2 தினங்களுக்கு முன்பு வங்கியின் வரவு, செலவு மற்றும் நகை அடகு விவரங்கள் குறித்து அலுவலர்கள் முழுமையாக ஆய்வு செய்தனர். அதில், சங்கத்தில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த 159 கிராம் நகைகளை, தனது சொந்த தேவைக்காக நகை மதிப்பீட்டாளர் சாமிநாதன், வேறொரு தனியார் வங்கியில் அடகு வைத்திருந்ததும், இதற்கு கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் சங்கிலி என்பவர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக அறந்தாங்கி துணை பதிவாளர் முருகேசன் கொடுத்த புகாரின் அடிப்படையில், சங்கிலி, சாமிநாதன் ஆகியோர் மீது காரையூர் காவல் நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் புகாருக்குள்ளான சங்கிலி, சாமிநாதன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து புதுக்கோட்டை மண்டல கூட்டுறவு இணை பதிவாளர் உமா மகேஸ்வரி  இன்று உத்தரவிட்டுள்ளார்.
 

மேலும் படிக்க: உக்ரைனில் பயின்ற இந்திய மாணவர்களுக்கு விரைவில் கல்விக்கடன் ரத்து.. எம்.பி கடிதத்திற்கு மத்திய அமைச்சர் பதில்

click me!