தமிழகத்தில் இந்தி பேசியதால் 12 வடமாநில தொழிலாளர்கள் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டதாக வதந்தி பரப்பிய நபருக்கு எதிராக தூத்துக்குடி காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக வன்முறைகள் நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகளின் உச்சக்கட்டமாக தமிழகத்தில் இந்தி பேசிய காரணத்திற்காக வடமாநில தொழிலாளர்கள் 12 பேர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக செய்தி வெளியானது.
இந்த தகவல் வடமாநிலங்கள் முழுவதும் காட்டு தீ போல பரவத் தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக பீகார் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் தமிழகத்தில் உள்ள பீகார் மாநில தொழிலாளர்களின் நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. தொடர் வதந்திகளின் பலனாக வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கே செல்லும் நிலை உருவானது.
இந்நிலையில், தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களின் நிலை குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் இந்தி பேசிய காரணத்திற்காக 12 தொழிலாளர்கள் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வதந்தி பரப்பிய நபர் மீது தூத்துக்குடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மட்டும் தான் வெளிமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் - அமைச்சர் பதில்
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரமோத் உம்ராவ் என்ற உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நபர் வெளியிட்ட பொய்யான செய்தி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. அடிப்படையில் இவர் ஒரு வழக்கறிஞர் என்பதால் இவரது கருத்து உண்மை என்று நம்பி பலரும் அதனை பலருக்கும் பகிர்ந்துள்ளனர். இதனால், கலகம் விளைவித்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வடமாநில தொழிலாளர்களுக்கு எதிரான தற்போதைய நிலைக்கு சீமான் தான் காரணம் - எச்.ராஜா காட்டம்