
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராம மக்கள், ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதியில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே போராட்டம் நடத்தப்பட்டு வாபஸ் பெறப்பட்ட நிலையில் இரண்டாம் கட்டமாக நடைபெறும் இந்த போராட்டம் 90 நாட்களைக் தாண்டி நடந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று நெடுவாசலில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் ராமசாமி, கோட்டாட்சியர் பொறுப்பு ஜெயபாரதி, ஆலங்குடி வட்டாட்சியர் ராஜேஸ்வரி ஆகியோர் நெடுவாசல் வி.ஏ.ஓ. அலுவலகத்தில் ஆலோசனை செய்தனர். பின்னர் போராட்டம் நடக்கும் இடத்துக்கு வந்த அவர்கள், மக்களை சந்தித்தனர்.
போராட்டம் நடத்தியவர்களிடம், மாவட்ட வருவாய் அலுவலர் ராமசாமி, முதலமைச்சரை சந்திக்க அமைச்சர் அழைப்பு கொடுத்தாரே ஏன் சந்திக்க வரவில்லை என்றார்.
அப்போது போராட்டக்காரர்கள், எங்களது கோரிக்கை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதை செய்யும் வரை போராட்டம் தொடர்ந்து நடக்கும் என்றார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அனுப்பியதால தான் நாங்கள் வந்துள்ளோம். உங்களின் கோரிக்கையை, ஆட்சியரிடம் சொல்கிறோம், நீங்கள் போராட்டத்தை நிறுத்துங்கள் என்றனர்.
அதற்கு நெடுவாசல் கிராம மக்கள் முடியாது என்று ஒரே குரலாக ஒலித்தனர். இதையடுத்து, அதிகார்கள் அனைவரும் திரும்பிச் சென்றனர்.