ஐ.எஸ்.ஐ சான்று இல்லாத தலைக்கவசம் அணிந்தால் ஓட்டுனர் உரிமம் ரத்து - கடலூர் ஆட்சியர் அதிரடி...

First Published Jan 16, 2018, 8:43 AM IST
Highlights
Canceling Driving License wearing helmet without isi - Cuddalore Collector


கடலூர்

ஐ.எஸ்.ஐ (இந்திய தர நிர்ணயம்) சான்று பெறாத தலைக்கவசத்தை அணிந்தால் வாகனத்தின் அனைத்து ஆவணங்கள் மற்றும் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்று கடலூர் ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே எச்சரித்துள்ளார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே நேற்று செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், "கடலூர் மாவட்டத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு 4 ஆயிரத்து 619 சாலை விபத்துகளும், 2017-ஆம் ஆண்டு சுமார் 3 ஆயிரத்து 610 சாலை விபத்துகளும் நடந்துள்ளன.  இதில் 2016-ஆம் ஆண்டில் 429 பேரும், 2017-ஆம் ஆண்டில் 358 பேரும் உயிரிழந்துள்ளனர்.

சாலை விதிகளை கடைபிடிக்காததால்தான் இந்த விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது. இதனால் சாலை விதி மீறல்களுக்காக கடந்த 2017-ஆம் ஆண்டில் 3 ஆயிரத்து 719 வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனவே, வாகன ஓட்டிகள் கண்டிப்பாக சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும். குறிப்பாக சமீப காலமாக நடந்த சாலை விபத்துகளில் இருசக்கர வாகனத்தை ஓட்டியவர்களும், பின்னால் அமர்ந்து பயணம் செய்தவர்களும்தான் அதிகளவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது.

எனவே, இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். அதிலும் இந்திய தர நிர்ணய சான்று பெற்ற தலைக்கவசத்தை மட்டுமே அணிய வேண்டும். இல்லையேல் அந்த வாகனத்தின் அனைத்து ஆவணங்கள் மற்றும் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.

அதேபோல நான்கு சக்கர வாகனங்களை ஓட்டும் ஓட்டுனர்களும், பயணிகளும் கண்டிப்பாக ‘சீட் பெல்ட்’ அணிய வேண்டும்.

செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தை ஓட்டக்கூடாது, குடித்துவிட்டு வாகனங்களை இயக்கக் கூடாது, வாகனங்களில் அதிகபாரம் ஏற்றிச்செல்லக் கூடாது.

இந்த விதிமுறை பின்பற்ற தவறும் பட்சத்தில் போக்குவரத்து விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்ட வாகனத்தின் அனைத்து ஆவணங்கள் மற்றும் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

click me!