
கோயம்புத்தூர்
பணம் வைத்திருந்தும் சாராயம் குடிக்க பணம் தராததால் தந்தையை கத்தியால் குத்திக் கொன்ற மகனை காவலாளர்கள் கைது செய்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டம், ஆர்.எஸ்.புரம் தடாகம் சாலை இராயப்பபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (58). இவருடைய மனைவி ஜோதிலட்சுமி (53). இவர்களுக்கு தீப்ஸ்வரூப் (27) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் திருமணம் முடிந்து தனது கணவருடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். ஜோதிலட்சுமியும் தனது மகளுடன் அமெரிக்காவில் உள்ளார்.
செல்வராஜூக்கு அதேப் பகுதியில் இரண்டு வீடுகள் இருப்பதால் அதை வாடகைக்கு விட்டு அதில் வரும் வாடகையை வைத்து வாழ்ந்து வந்தார்.
ஓட்டுநர் வேலை செய்துவந்த தீப்ஸ்வரூப் கடந்த சில நாள்களாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். தந்தை, மகன் இருவருக்கும் ஒன்றாக அமர்ந்து சாராயம் குடிக்கும் பழக்கம் இருந்ததாம். இருவரும் சாராயம் குடிக்க மகிழ்ச்சியாக அமர்வதும், போதை தலைக்கேறியதும் தகராறு செய்வதும் இவர்களது வாடிக்கையாம்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரம் அடைந்த தீப்ஸ்வரூப் கத்தியை எடுத்து தனது தந்தை என்றும் பாராமல் அவருடைய கழுத்து, மார்பு, வயிறு ஆகிய பகுதிகளில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த செல்வராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு, கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவந்த போதிலும் சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் மாலையே செல்வராஜ் உயிரிழந்தார்.
இந்த கொலை குறித்து ஆர்.எஸ்.புரம் காவலாளர்கள் வழக்குப்பதிந்து தீப்ஸ்வரூப்பை கைது செய்து விசாரணை நடத்தினர.
அப்போது அவர் காவலாளர்களிடம் அளித்துள்ள வாக்குமூலம்: "சிறுவயதில் இருந்தே எனது மீது தந்தை அதிகளவில் பாசம் வைத்திருந்தார். நான் ஓட்டுநர் வேலைக்குச் சென்றாலும், நாம் வீடு வாடகைக்கு விட்டு இருப்பதால் அதில் இருந்து கிடைக்கும் வருமானமே நமக்கு போதும். நீ ஓட்டுநர் வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று கூறினார். இதனால் நான் வேலைக்கு செல்லவில்லை. நான் கேட்கும் நேரத்தில் எனக்கு பணம் கொடுத்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் நான் குடிப்பதற்காக பணம் கேட்டேன். ஆனால், அவர் பணம் இல்லை என்று கூறினார். ஆனால், அவர் வைத்திருக்கும் மணிபர்சில் பணம் வைத்திருந்தார்.
ஏன் பணம் இல்லை என்று கூறுகிறீர்கள்? என்று கேட்டேன். இதில் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஆத்திரத்தில் நான் எனது தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டேன்" என்று அவர் கூறியதாக காவலாளர்கள் தெரிவித்தனர்.
பின்னர், காவலாளார்கள் தீப்ஸ்வரூப்பை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைத்தனர்.