
சென்னை திருவேற்காட்டில் காதலன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் மனம் நொந்த இளம்பெண் செல்ஃபோன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவேற்காடு தம்புசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரியா. இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், பிரியா அதேபகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது.
இதையடுத்து அந்த இளைஞர் கடந்த மாதம் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட அந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பூவிருந்தவல்லி மகளிர் காவல் நிலையத்தில் பிரியா புகார் அளிக்க சென்றுள்ளார்.
அப்போது, போலீசார் பிரியாவை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், திடீரென பிரியா, வீட்டின் அருகே உள்ள செல்ஃபோன் டவரின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு அந்த போலீசார் சுமார் ஒரு மணிநேரம் பிரியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததின் பேரில் அந்த பிரியா கீழே இறங்கி வந்தார்.