பள்ளித்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளை நடிகர் விஜய் சந்தித்து வாழ்த்தி பரிசு பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு வரும் மாணவர்களுக்கு எந்த வித இடையூறும் இல்லாத வகையில் விழா அரங்கத்திற்குள் செல்ல துபாயில் இருந்து 50 பவுன்சர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
அரசியலில் விஜய்
திமுக- அதிமுகவிற்கு போட்டியாக அரசியல் களத்தில் இறங்கியுள்ளார் நடிகர் விஜய், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை குறிவைத்துள்ள விஜய். தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இதனை தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செய்ய தொடங்கிவிட்டார். ஆண்டு தோறும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்டம் வாரியாக சந்தித்து வாழ்த்து தெரிவித்து பரிசுகளை வழங்கி வருகிறார். அந்த வகையில் இந்தாண்டும் மாணவர்களுக்கான பரிசு வழங்கும் விழாவிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனவே இந்த முறை நடிகர் விஜய் கண்டிப்பாக அரசியல் பேசுவார். மாணவர்களின் அரசியல் விருப்பத்தை தெரிந்துக்கொள்வார் என பேசப்பட்டது.
மாணவர்களுடன் விஜய்
இதனால் இந்த விழாவிற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த நிலையில் இன்று திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கான்வென்சன் சென்டரில் நடிகர் விஜய் மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். மாணவர்களுடன் பெற்றோருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் உள்ளே ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. விஜய் சார்பாக அனுப்பப்பட்ட அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலும் விழாவில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு உயர்தர சைவ உணவுகளும் பரிமாறப்படவுள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் அரங்கத்திற்கு போலீசார் பாதுகாப்பு தமிழக வெற்றிக்கழகம் சார்பாக கோரப்பட்டது.
பாதுகாப்பு பணியில் துபாய் பவுன்சர்கள்
இருந்த போதும் விஜய் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கத்திற்கு சுற்றி பவுன்சர்கள் பாதுகாப்பிற்காக நிற்கவைக்கப்பட்டுள்ளனர். விஜய் திடீரென ஒரு இடத்திற்கு சென்றாலே கூட்டம் அலைமோதும், தற்போது மேடை அமைத்து விழா என்றால் கேட்கவா வேண்டும், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூட வாய்ப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பிற்காக துபாயில் இருந்த 50 பவுன்சர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விஜய் நிகழ்ச்சிகளுக்கு வருபவர்களுக்கு வழிகாட்டியும், ரசிகர்கள் அதிகளவு கூடாமல் தடுக்கும் வகையில் பணியில் பவுன்சர்கள் ஈடுபட்டுள்ளனர். பவுன்சர்கள் காதில் சிறிய வகை மைக், பாக்கெட்டில் சிறிய வகை ஸ்பீக்கர் உள்ளிட்டவைகள் வைத்துக்கொண்டு சினிமா காட்சிகளில் விவிஐபிக்களுக்கு பாதுகாப்பு வழங்க வரும் பாதுகாவலர்கள் போல் காட்சியளித்து வருகின்றனர். புதிதாக காட்சியளிக்கும் பவுன்சர்களையே அந்த பகுதியில் கடந்த செல்பவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.