
கோவை உக்கடம், ஜி.எம்.நகர், மஜீத் காலனியை சேர்ந்தவர் சுலைமான். இவரது மனைவி பாத்திமா. இவர்களுக்கு சல்மான் (18) என்ற மகனும், சாய்ராபானு (16) என்ற மகளும் உள்ளனர்.
கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக வெயில் வாட்டி வதைத்தது. 100 டிகிரிக்கு மேலாக இருந்ததால், அனல் காற்று தாங்க முடியாமல் மக்கள் தவித்தனர். மழைக்காக ஏராளமானோர் பல்று யாகங்கள் நடத்தி வழிப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று கோவை நகர் முழுவதும் பலத்த மழை பெய்தது. அப்போது சுலைமான், மனைவி பாத்திமாவுடன் வெளியே சென்றிருந்தார். சல்மான் மற்றும் சாய்ரா பானு மட்டும் வீட்டில் இருந்தனர்.
பலத்த மழை பெய்ததால், வீட்டுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால், வீட்டில் இருந்த 2 பேரும், மழைநீரை பாத்திரத்தில் பிடித்து வெளியே ஊற்றினர். அப்போது வீட்டின் முன்புறம் இருந்த இரும்பு மின்கம்பத்தை சல்மான் பிடித்தார்.
அந்த நேரத்தில் அந்த கம்பியில் மின்கசிவு ஏற்பட்டு இருந்தது. இதனால், மின்சாரம் பாய்ந்து அவர் அலறி துடித்தார். அண்ணனின் அலறல் சத்தம் கேட்டுசாய்ராபானு ஓடிவந்தார். சல்மானை காப்பாற்ற முயன்றபோது, அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
தகவலறிந்து பெரியகடைவீதி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலங்களை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அதில், அதே பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா (35). இந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து தனது வீட்டுக்கும், அங்குள்ள கேரம்போர்டு விளையாட்டு மன்றத்துக்கும் முறைகேடாக இணைப்பு கொடுத்துள்ளார்.
அதில் இருந்து வந்த மின்சார வயரை, இரும்பு கம்பத்தில் சுற்றி கட்டியுள்ளார். மழையும் காற்றும் வீசியதால், அந்த மின்சார வயர் அறுந்துவிட்டது. அந்த வயரில் மூலம் இரும்பு கம்பத்துக்கு மின்சாரம் பாய்ந்தது.
அந்த நேரத்தில், சல்மான் அதை தொட்டதால், இந்த விபத்து ஏற்பட்டது தெரிந்தது. இதையடுத்து போலீசார் முஸ்தபாவை போலீசார் கைது செய்தனர்.