திமுக, அதிமுக ஆகிய இரண்டு தீய சக்திகளையும் ஒழித்து தமிழ்நாட்டை காக்க வேண்டும் – அன்புமணி ராமதாசு பேச்சு…

Asianet News Tamil  
Published : Jun 08, 2017, 08:54 AM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
திமுக, அதிமுக ஆகிய இரண்டு தீய சக்திகளையும் ஒழித்து தமிழ்நாட்டை காக்க வேண்டும் – அன்புமணி ராமதாசு பேச்சு…

சுருக்கம்

DMK and AIADMK should eliminate and save Tamil Nadu

கடலூர்

திமுக, அதிமுக ஆகிய இரண்டு தீய சக்திகளையும் ஒழித்து தமிழ்நாட்டை காக்க வேண்டும் என்று மருத்துவர் அன்புமணி ராமதாசு பேசினார்.

உச்சநீதி மன்றம் வரைச் சென்று சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழகத்தில் டாஸ்மாக் சாராயக் கடைகளை மூடச்செய்ததற்காக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு, அன்புமணி ராமதாசு எம்.பி. ஆகியோருக்கு பாராட்டு விழா, வெற்றிவிழா பொதுக் கூட்டம் சிதம்பரத்தில் நேற்று நடந்தது.

போல்நாராயணன் தெருவில், கடலூர் தெற்கு மற்றும் மேற்கு மாவட்ட பாமக சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் அசோக்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர்கள் செல்வ.மகேஷ், சுரேஷ், அன்புசோழன், மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தக் கூட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு, அன்புமணி ராமதாசு எம்.பி., மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் குரு, சமூக நீதிப்பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலு ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.

அப்போது மருத்துவர் அன்புமணி ராமதாசு பேசியது:

“தமிழகத்தில் திராவிட கட்சிகள் சாராயத்தைக் கொண்டுவந்து மக்களுக்கு துரோகம் செய்தனர். ஆனால், சமூகநீதி போராளி மருத்துவர் ராமதாஸ் மட்டுமே சாராயத்தை ஒழிக்க போராடி உச்சநீதிமன்றம் சென்று வாதாடி இந்தியா முழுவதும் 90 ஆயிரம் சாராயக் கடைகளையும், தமிழகத்தில் 3 ஆயிரத்து 321 சாராயக் கடைகளையும் மூடச்செய்துள்ளார். இனிவரும் காலங்களில் தமிழகத்தை நல்ல ஆட்சியாளர்கள் ஆள வாய்ப்பு கொடுங்கள்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தை சீரமைக்க பல போராட்டங்களை பாமக நடத்தியது. தற்போதும் இந்த பல்கலைக்கழகம் சீர்கெட்டு கிடக்கிறது. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை. எனவே அண்ணாமலை பல்கலைக்கழகத்தை சீர்படுத்தவில்லையெனில்  பாமக சார்பில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

தமிழகத்தில் எண்ணெய் கிணறுகள் இருக்கக்கூடாது, அனைத்தையும் தூக்கியெறிய வேண்டும்.

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டக்கோரி எனது தலைமையில் பெரிய போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்தப் போராட்டத்தில் இளைஞர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் மிக மோசமான ஆட்சி நடக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

திமுக, அதிமுக ஆகிய இரண்டு தீய சக்திகளையும் ஒழிக்க வேண்டும். தமிழ்நாட்டை காக்க மாற்றம் வேண்டும். அந்த மாற்றத்தை நான் கொடுப்பேன், தமிழக மக்கள் என்னோடு இணைந்து செயல்பட வேண்டும்” என்று மருத்துவர் அன்புமணி ராமதாசு பேசினார்.

பிறகு மருத்துவர் ராமதாசு பேசியது:

“உச்சநீதிமன்றம் வரைச் சென்று போராடி தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த சாராயக் கடைகள் மூடப்பட்டன. சாராயக் கடைகளால் இந்தியாவில் ஆண்டுக்கு இரண்டு இலட்சம் பேர் இறக்கிறார்கள்.

பீகாரில் முதலமைச்சர் நித்தீஷ்குமார் பூரண மதுவிலக்கை கொண்டு வந்துள்ளார். அவருக்கு பாமக சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று அன்புமணி ராமதாசு தெரிவித்தார். அந்த விழா விரைவில் கண்டிப்பாக நடத்தப்படும்.

அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தமிழ்நாட்டை நாசமாக்கிவிட்டது.

மோடி அறிவிக்கும் திட்டங்கள் எல்லாம் செயல்படாத திட்டம். மக்களுக்கு பிரயோஜனம் இல்லாத திட்டங்கள்.

2023–ஆம் ஆண்டு தமிழ்நாடு சொர்க்க பூமியாக மாறும் என்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார். ஆனால், அதற்கான அறிகுறிகளோ, மாற்றமோ தமிழகத்தில் இல்லை.

தமிழகத்தில் தனிநபர் வருமானம் ஒன்றரை இலட்சம் ரூபாய் கூட இல்லை. ஆனால், மற்ற மாநிலங்களில் மூன்றரை இலட்சம் ரூபாயில் இருந்து நான்கரை இலட்சம் ரூபாய் வரை கிடைக்கிறது.

தமிழகத்தில் பெண்கள் தானாகவே ஒன்று திரண்டு சாராயக் கடைகளை அடித்து நொறுக்கி, அதனை மூடச்செய்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது.

தமிழகத்தில் சாராயக் கடைகளை திறந்துவிட்ட திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளை நீங்கள் தூக்கி எறியுங்கள்.

மாற்றம் இருந்தால்தான் முன்னேற்றம் வரும். மாற்றத்தை நீங்கள் கொடுங்கள், முன்னேற்றத்தை அன்புமணி ராமதாசு தருவார்.

தமிழகத்தில் உயர்கல்வித் துறையில் ஊழல் நடக்கிறது. ஊழலுக்கு ஒன்பது வழிகள் என்பார்கள். ஆனால், தற்போது நடைபெறும் ஊழலைப் பார்த்தால், அதற்கு எத்தனை வழிகள் என்பதே தெரியவில்லை.

தமிழக சட்டசபையில் மறைந்த ஜெயலலிதாவின் படத்தை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவரது படம் தேவைதானா?

தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியால் குடிநீருக்காக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசு ஏற்று நடத்தியும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.

தமிழ்நாட்டில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளும் மாறி, மாறி ஆட்சி நடத்துகிறார்கள். இதில் மாற்றம் வேண்டும். இதற்காக திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் தவிர வேறு எந்த கட்சியும் எங்களுடன் கூட்டணிக்கு வந்தால், அவர்களை ஏற்றுக் கொள்வோம்” என்று மருத்துவர் ராமதாசு பேசினார்.

கூட்டத்தில் மாநில சொத்து பாதுகாப்பு குழுத்தலைவர் கோவிந்தசாமி, மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் பு.தா.அருள்மொழி, மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் தன்ராஜ், மாநில ஒழுங்குநடவடிக்கைகுழு தேவதாசு, மாநில துணைத்தலைவர் சந்திரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் ஜெய.சஞ்சீவி, பா.ம.க. மாநில மகளிர் அணி நிர்வாகிகள் சிலம்பு செல்வி, ஆலயமணி, திலகபிரியா, மாநில நிர்வாகிகள் முருகன், பழனிச்சாமி, மாவட்ட நிர்வாகிகள் செல்வபிரதீஸ், வீரமணி, கலியபெருமாள் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

PREV
click me!

Recommended Stories

திருச்செந்தூரில் விஜய் விஷ்வரூப தரிசனம்... வெற்றி வேல் உடன் வலம் வந்த தளபதி ! | TVK Vijay
டிப்டாப் உடையில் வாங்கிங்.! மாஸ் காட்டிய மு.க.ஸ்டாலின் | MK Stalin Kodaikanal Visit