
சென்னையில் இருந்து கோவைக்கு புறப்பட்டு சென்ற தனியார் பஸ்சில் 5 பேர் கொள்ளையடிக்க முயன்றனர். அதில், 4 பேர் தப்பிவிட்டனர். ஒருவரை பிடித்து, பயணிகள் பின்னி எடுத்துவிட்டனர். பின்னர், போலீசில் ஒப்படைத்தனர்.
சென்னையில் இருந்து கோவைக்கு தனியார் சொகுசு பஸ், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பஸ் பணிமனையில் இருந்து நேற்று இரவு 11.30 மணிக்கு புறப்பட்டது. அதில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர்.
பணிமனையில் இருந்து வெளியே வந்தபோது, டிப்டாப் உடையில் 5 பேர், பஸ்சில் பயணம் செய்வதுபோல் நின்று, கை காட்டினர். இதனால், டிரைவர் போத்திராஜ் (50) பஸ்சை நிறுத்தினார்.
பஸ்சில் ஏறியதும் அவர்கள், கோவை செல்ல வேண்டும் என கூறினர். பஸ் புறப்பட்டது. சிறிது நிமிடத்தில் அவர்களில், ஒருவர், டிரைவரின் முதுகில் கத்தியை வைத்து பஸ்சை வேகமாக எடுக்கும்படி மிரட்டினார். மற்றவர்கள், பயணிகளிடம் இருந்த உடைமைகளை கொள்ளையடிக்க முயற்சி செய்தனர்.
இதை கண்டு சுதாரித்து கொண்ட பயணிகள், மர்மநபர்களை தாக்க தொடங்கினர். இந்த சத்தம் கேட்டு டிரைவர் பஸ் உடனடியாக நிறுத்தினார். உடனே மர்மநபர்கள், தலை தெறிக்க பஸ்சில் இருந்து இறங்கி அலறியடித்து கொண்டு ஓடினர்.
ஆனாலும், பயணிகள் அவர்களை விரட்டி சென்றனர். ஆனால், 4 பேர் தப்பிவிட்டனர். ஒருவர் மட்டும் சிக்கினார். அவருக்கு தர்மஅடி கொடுத்து, பின்னி பெடல் எடுத்தனர். பின்னர், அவரை அரும்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு கிராமத்தை சேர்ந்த தினேஷ் என்பது தெரிந்தது. அவர் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தொடர்ந்து போலீசார் தப்பியோடியவர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து, வலைவீசி தேடி வருகின்றனர்.