
கடலூர்,
கடலூரில், குடியரசு தின விழா நடைபெறும் அண்ணா மைதானத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.
இந்தியாவிற்கு நாளை குடியரசு தினம். அனைத்து இடங்களிலும் தேசிய கொடியை ஏற்றி இந்த தினத்தை கொண்டாடுவது வழக்கம்.
கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நாளை காலை 8 மணிக்கு நடக்க இருக்கிறது. இந்த விழாவில் ஆட்சியர் ராஜேஷ் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவலாளர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.
இதனைத் தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவித்தல், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பரிசு வழங்குதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கும். மாணவ– மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் காவலாளர்கள், ஊர்க்காவல் படையினர், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், செஞ்சிலுவை சங்க மாணவர்கள், தேசிய மாணவர் படையினர் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர். இதை மாவட்ட காவல் கண்காணிப்பாலர் விஜயகுமார் நேரில் பார்வையிட்டார்.
அரசு பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சி ஒத்திகையும் நடைப்பெற்றது.
மற்றும் விழா நடைபெறும் இடத்தில் மேடை அமைக்கும் பணி, தியாகிகள் அமர்வதற்காக பந்தல் அமைக்கும் பணி, கொடி, தோரணங்கள் கட்டும் பணிகளும் தொடங்கப்பட்டு நடந்து வருகின்றன.
இந்த குடியரசு தின விழாவையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கடலூரில் குடியரசு தின விழா நடைபெறும் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். அவர்கள் வெடி குண்டுகள் ஏதேனும் உள்ளதா? வெடி பொருட்கள் உள்ளதா? என்பதை நவீன கருவிகளை கொண்டு சோதனை நடத்தினர்.
ஆனால், சந்தேகப்பட்டபடி அந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. மைதானம் பாதுக்காப்பாகவே இருந்தது.