
பெண்ணாடம்,
பெண்ணாடத்தில் 36 ஆண்டுகளாக இருந்த ரேசன் கட்டிடத்தை சீரமைத்து அங்கேயே ரேசன் பொருட்களை வழங்க வேண்டும் என்று கூறி விற்பனையாளரை ரேசன் கடைக்குள் வைத்து பூட்டி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்ணாடம் அருகேயுள்ள நந்திமங்கலம் கிராமத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்பு ரேசன் கடை அமைக்கப்பட்டு, அரிசி, மண்ணெண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இந்த கட்டிடம் சேதமடைந்ததால், அதே கிராமத்தில் உள்ள வேறொரு இடத்தில் புதிதாக ரேசன் கடை கட்டும் பணி நடைபெற்றது. இதற்கு அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், புதிய கட்டிடத்தின் கட்டுமான பணிகள் முடிந்து ரேசன் கடை திறக்கப்படாமல் இருந்தது.
இதனால் கிராம மக்களே புதிதாக கட்டப்பட்ட ரேசன் கடை கட்டிடத்தை திறந்து வைத்தனர்.
இதனையடுத்து நேற்று காலை பழைய கட்டிடத்தில் இருந்த பொருட்களை எடுத்து செல்வதற்காக விற்பனையாளர் இளங்கோவன் வந்தார். இதனைக் கண்ட கிராம மக்கள் ஒன்று திரண்டு வந்து, சேதமடைந்த கடையை சீரமைத்து அதிலேயே ரேசன் கடை இயங்க வேண்டும். அதனால் பொருட்களை எடுத்து செல்ல விட மாட்டோம் எனக்கூறி விற்பனையாளர் இளங்கோவனை ரேசன் கடைக்குள் வைத்து பூட்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பெண்ணாடம் காவல் உதவி ஆய்வாளர் புருசோத்தமன் மற்றும் வடகரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் கோவிந்தசாமி ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் இரண்டு கடைகளும் சுழற்சி முறையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை அடுத்து கிராம மக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்ர்.