
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தமிழ்நாட்டில் தொடர்ந்து பேசுபொருளாக உள்ளது. இது தவெகவின் தவறால் நிகழ்ந்த பேரழிவு என்று திமுகவும், செந்தில் பாலாஜி சதித் திட்டம் தான் கரூர் சம்பவத்துக்கு காரணம் எனவு தவெகவினரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். கரூர் விவகாரம் குறித்து பாஜகவின் உண்மை கண்டறியும் குழு நேரில் விசாரணை நடத்தி திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியது.
பாஜக விசாரணையால் சந்தேகத்தை கிளப்பிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன், ''கரூர் விவகாரத்தில் பாஜக விஜய்யை காப்பாற்ற முயற்சிக்கிறது'' என்றார். மேலும் விஜய் சங்பரிவார் மற்றும் பாஜக கட்டுப்பாட்டுக்கு வந்து விட்டதாகவும் திருமாவளவன் குற்றம்சாட்டினார். இந்நிலையில், திருமாவளனின் குற்றச்சாட்டுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், ''ஏற்கெனவே பாஜக எங்களுடைய எதிரி என்று விஜய் பேசி வருகிறார். பிறகு எப்படி எங்கள் கட்டுப்பாட்டில் விஜய் இருக்க முடியும்?'' என்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''கும்பமேளா கூட்ட நெரிசல் குறித்து இப்போது பேசுகிரார்கள். கும்பமேளா கூட்ட நெரிசல் எப்படி நடந்தது? என்று அனைவருக்கும் தெரியும். அங்கு 64 கோடி மக்கள் வந்தனர். ஆனால் கரூரில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கரூர் சம்பவத்தில் அடுக்கடுக்கான கேள்விகள்
யார் கரென்ட் ஆப் செய்தது? யார் செருப்பை தூக்கி வீசியது? காவல் துறை என்ன செய்து கொண்டிருந்தது? ஏன் தவெக கேட்ட இடத்தில் அனுமதி கொடுக்கவில்லை? போலீஸ் தடியடி நடத்த வேண்டிய அவசியம் என்ன?கூட்டம் தொடங்குவதற்கு முன்பே ஆம்புலன்ஸ்கள் வரிசையாக வருவதற்கு காரணம் என்ன? ஏன் முதல்வருக்கு மட்டும் நல்ல இடம் கொடுத்து விட்டு தவெகவுக்கு ஏன் அந்த இடம் கொடுக்கவில்லை? என்ற கேள்விகள் எழுகின்றன.
பாஜக உண்மை கண்டறியும் குழு விசாரணை அறிக்கையை தலைமையிடம் அளிக்கும். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.