
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாமக இளைஞரணி தலைவராக ஜி.கே.மணியின் மகன் தமிழ் குமரனை நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையிலான மோதல் உச்சம் தொட்ட நிலையில், ஜி.கே.மணி ராமதாஸுக்கு ஆதரவாக நிற்கிறார். இந்த நிலையில் தான் அவரது மகனுக்கு ராமதாஸ் முக்கிய பொறுப்பை தூக்கி கொடுத்துள்ளார்.
இப்போது தமிழ் குமரன் நியமனம் செய்யப்பட்டுள்ள பாமக இளைஞரணி தலைவர் பொறுப்பு கடந்த ஆண்டு முகுந்தன் பரசுராமனுக்கு வழங்கப்பட்டது. விழுப்புரத்தில் கடந்த ஆண்டு இறுதியில் பாமக பொதுக்கூட்டம் நடைபெற்றபோது பாமக இளைஞரணித் தலைவர் பொறுப்பை முகுந்தனுக்கு ராமதாஸ் வழங்கியிருந்தார். இது தான் அன்புமனி, ராமதாஸ் மோதலுக்கு மூல காரணமாக அமைந்தது.
முகுந்தனுக்கு பதவி வழங்கியதற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பாமகவில் நீண்ட காலம் உழைப்பவர்களுக்கு பதவி வழங்க வேண்டும் என்று அவர் கூறினார். கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் முகுந்தன் தனது பதவியை ராஜினாமா செய்தார். ''சொந்த காரணங்களுக்காக பாமக இளைஞரணி தலைவர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன். மருத்துவர் அய்யா அவர்கள் தான் என்றென்றும் எனது குலதெய்வம்'' என்று முகுந்தன் விளக்கம் அளித்தார்.
அன்புமணிக்கு ஆதரவாக திரும்பினார்
மேலும் 'மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகிய தாங்கள் தான் எங்கள் எதிர்காலம் என்ற உணர்வுடன் தொடர்ந்து கட்சிப் பணியாற்றுவேன்' என்று கூறிய முகுந்தன் திடீரென அன்புமணி ஆதரவாக திரும்பினார். இதன்பிறகு அன்புமணி, ராமதாஸ் இடையேயான மோதல் பூதாகரமாக வெடித்தது. இருவரும் தங்கள் ஆதாவாளர்களை வைத்துக் கொண்டு பிடிக்காதவர்களை கட்சியில் இருந்து நீக்கினார்கள். அந்த வகையில் இப்போது தனக்கு ஆதரவாகவும், அன்புமணிக்கு எதிராகவும் நிற்கும் ஜி.கே.மணியின் மகன் தமிழ் குமரனுக்கு முக்கிய பொறுப்பை கொடுத்து அன்புமணியை வெறுப்பேற்றியுள்ளார் ராமதாஸ்.