தமிழக பாஜக சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது. அண்ணாமலை, தமிழிசை சௌந்தர்ராஜன், உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
தமிழக பாஜக சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது. இதில், முன்னணித் தலைவர்களான அண்ணாமலை, தமிழிசை சௌந்தர்ராஜன், எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட 9 வேட்பாளர்களின் பெயர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
பாஜக சார்பில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் இரண்டு கட்டங்களாக வெளியிடப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் அடங்கிய மூன்றாவது கட்ட பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
கோவை தொகுதியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அண்மையில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நீலகிரி தொகுதியில் போட்டியிட இருக்கிறார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுகிறார்.
நெல்லை தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் நயினார் நாகேந்திரனும் நெல்லை மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதாக அறி்விக்கப்பட்டுள்ளது. முதலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவதாக கூறப்பட்டிருந்த நிலையில், சிறிது நேரத்தில் நெல்லையில் போட்டியிடுவார் என்று மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சில தினங்களுக்கு முன் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை சௌந்தர்ராஜன் தென்சென்னை தொகுதியில் இருந்து போட்டிப்போகிறார்.
மத்திய சென்னையில் பி. செல்வம் போட்டியிடவுள்ளார். கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த ஏ.சி.சண்முகம் வேலூர் தொகுதியிலும், டி.ஆர்.பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியிலும் பாஜகவின் தாமரை சின்னத்திலேயே வேட்பாளர்களாகக் களமிறங்க உள்ளனர்.