
கடற்கரை சாலையில் குழந்தையை பள்ளிக்கு அழைத்து சென்ற தம்பதிகள் மோட்டார் சைக்கிளின் குறுக்கே நாய் ஓடியதால் சாலையில் நிலை தடுமாறி விழுந்ததில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது.
சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சிவகுமார்(35) . இவரது மனைவி உஷா(28). இவர்களுக்கு 5 வயதில் மகள் இருக்கிறாள். இவர்கள் மகளை சாந்தோமில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கவைத்து வருகின்றனர்.
தினமும் தனது ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு மகளை விட்டுவிட்டு சிவகுமாரும் அவரது மனைவியும் வேலைக்கு செல்வது வழக்கம் . இன்றும் அதே போல் தனது புல்லட் மோட்டார் சைக்கிளில் வண்ணாரப்பேட்டையிலிருந்து கிளம்பி ராஜாஜி சாலை வழியாக வந்து கடற்கரை காமாராஜர் சாலை வழியாக தனது மகளை பள்ளிக்கு அழைத்து வந்துகொண்டிருந்தார்.
பின்னால் அவரது மனைவி உஷா அமர்ந்திருந்தார். கண்ணகி சிலை தாண்டி காந்தி சிலை அருகில் வந்த போது நாய் ஒன்று சாலையை கடந்து குறுக்கே சென்றுள்ளது. நாயின் மீது ஏற்றிவிடாமல் சமாளிக்க மோட்டார் சைக்கிளை பிரேக் போட்டபோது நிலை தடுமாறி மூன்று பேரும் சாலையில் விழுந்தனர்.
இதில் மூவருக்கும் காயம் ஏற்பட்டது. கீழே விழுந்ததில் புல்லட் மோட்டார் பைக் திடீரென தீப்பிடித்து கொண்டது. தீ மளமளவென எரிந்ததில் யாராலும் தீயை அணைக்க முடியவில்லை.
உடனடியாக இது பற்றி தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் டிஜிபி அலுவலகத்தின் அருகிலிருந்து தீயணைப்பு வாகனம் வேகமாக வந்து தீயை அணைத்தது. ஆனாலும் தீயில் சிக்கி மோட்டார் சைக்கிள் முக்கால் பாகம் எரிந்துவிட்டது.
சாலையில் விழுந்ததால் காயமடைந்த சிவகுமார், அவரது மனைவி மற்றும் மகள் மூவரும் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று திரும்பினர். இந்த விபத்து குறித்து சாஸ்திரி நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.