
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, பென்சன் திட்டம் என மொத்தம் 14 அம்ச கோரிக்களை நிறைவேற்ற விலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுக்க இன்றும் நாளையும் (மார்ச் 28 மற்றும் மார்தச் 29) தேசிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
வேலை நிறுத்த போராட்டம்:
மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழகத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., எல்.பி.எப்., ஏ.ஐ.டி.யு.சி. போன்ற தொழிற் சங்கங்களும் தி.மு.க., கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., வி.சி.க., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளன. இதுதவிர தேசிய வங்கி நிறுவனங்களான பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட பெரும்பாலான வங்கி ஊழியர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதன் காரணமாக நாடு முழுக்க வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அமைப்புதாரா தொழிலாளர்கள் சுமார் 20 கோடிக்கும் அதிகமானோர் இந்த தேசிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என தகவல் வெளியாகி உள்ளது. இன்று (மார்ச் 28) காலை 6.00 மணிக்கு தொடங்கிய வேலை நிறுத்த போராட்டம் காரணமாக வெளி ஊர்களில் இருந்து சென்னை வந்தடைந்த பயணிகள் செண்ட்ரல் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் போதுமான அளவு பேருந்துகள் இயக்கப்படத காரணத்தால் கடும் அவதிக்கு ஆளாகினர்.
அதிக கட்டணம்:
தமிழ் நாட்டில் அரசு பேருந்துகளும் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்பட்டன. இதன் காரணமாக சென்னையை தவிர்த்து பிற நகரங்களில் இயங்கி வரும் தனியார் பேருந்துகளை மக்கள் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற பெரு நகரங்களில் ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுனர்கள் இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு வாடிக்கையாளர்களிடம் இருமடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
தேசிய பொது வேலை நிறுத்தம் காரணமாக பொது பேருந்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தாலும், மெட்ரோ ரெயில் மற்றும் புறநகர் மின்சார ரெயில் சேவை வழக்கம் போல் இயங்கி வருகிறது. இதன் காரணமாக வழக்கத்தை விட மெட்ரோ மற்றும் புறநகர் மின்சார ரெயில்களில் காலை முதலே கூட்டம் அதிகரித்த வாரு காணப்படுகிறது.