ஆம்பூர் எம்.எல்.ஏ.வை துரத்தி துரத்தி கொட்டிய தேனீக்கள்... கொட்டு தாளாமல் அடித்து பிடித்து ஓட்டம்...

First Published Oct 28, 2016, 3:24 AM IST
Highlights


முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 37 நாட்கள் கடந்துள்ளன. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலமடைய அமைச்சர்கள், நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் கோயில்கேள், தர்காக்கள், சர்ச்சுகளில் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.

தங்கள் தலைவி உடல்நலம் பெறுவதற்காக, தங்கள் உடலை வருத்திக் கொண்டு அங்க பிரதட்சணம், மண்சோறு, அலகு குத்துதல், பால் குடம் ஏந்துதல், தீச்சட்டி ஏந்துதல், நெருப்பு மிதித்தல் என பல வகைகளில் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகினறனர். சில இடங்களில் யாகம் வளர்த்து கோ பூஜை நடத்தி வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.

இந்த நிலையில், ஆம்பூர் அருகே வடசேரியில் அதிமுக எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணி, முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பெறுவதற்காக பூஜை ஒன்றை நடத்தினார். இதில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். பூஜையின்போது, ஏராளமான புகை கிளம்பியது.

அவர்கள் பூஜை நடத்திய இடமருகே, மரம் ஒன்றில் தேன் கூடு ஒன்று இருந்துள்ளது. பூஜையின்போது கிளம்பிய புகை காரணமாக தேனீக்கள் கடுப்பாகி ஆயிரக்கணக்கில் பறந்து வந்து பூஜையில் ஈடுபட்ட இருந்த அதிமுக எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணியம் மற்றும் தொண்டர்களை விரட்டி விரட்டி கொட்டியது. 

தேனீக்களின் கொட்டு தாங்காமல் அதிமுக எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணியம் மற்றும் தொண்டர்கள் அடித்து பிடித்து தப்பியோடினர். ஆனாலும் தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்டியதில் எம்.எல்.ஏ. உட்பட 10 அதிமுக தொண்டர்களுக்கு காயம் ஏற்பட்டது.

தேனீ கொட்டியதில் காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். முதலமைச்சர் உடல் நலம் பெற பூஜை நடத்தியவர்கள், தேனீக்கள் கொட்டியதால் தாங்களே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது. 

click me!