சென்னை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பள்ளிக்கரணை, படப்பை, கேளம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் என்ஐஏ சோதனை நடந்து வருகிறது.
தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர்களின் வீடுகளில் இந்த சோதனை நடைபெறுவதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் தற்போது வங்கதேசம், மியான்மர் நாடுகளை சேர்ந்தவர்கள் வட மாநிலத்தவர் போர்வையில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் ஊடுருவி உள்ளதாக வெளியான தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருவது தெரியவந்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த சோதனையில் படப்பை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சகாபுதீன், மறைமலை நகரில் வசித்து வந்த வந்த முன்னா, அவருடன் இருந்தவர் என 3 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலி ஆதார் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 3 பேருமே வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும், ஆனால் திரிபுராவை சேர்ந்தவர்கள் என்று கூறி சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்து, அவர்களுக்கு வேலை கொடுத்த சாகித் உசேன் என்பவரையும் கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போல் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகர், சின்னக்கரை ஆகிய பகுதிகளில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். வட மாநில தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றும் நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு வெளி மாநிலங்களில் இருந்து ஆட்களை அழைத்து வரும் முகவர்களின் வீடுகளில் சோதனை நடந்து வருகிறது.
சென்னை, திருப்பூரை தொடர்ந்து புதுச்சேரி 100 அடி சாலை எல்லை பிள்ளை சாவடி பகுதியில் உள்ள ஒரு குடோனில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனைக்கு பிறகு இதுகுறித்த முழுமையான தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.