முதலீடுகளை பெற்று மோசடி செய்த வழக்கில் ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனருக்கு நிதி நிறுவன மோசடிகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஜாமின் மறுத்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு, 'ஆருத்ரா கோல்டு டிரேடிங்' நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் தோறும் 10 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாக கூறி, பல ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தாமாக முன் வந்து நிறுவன இயக்குனர்கள் எட்டு பேர் மீதும், ஆருத்ரா என்ற பெயரில் செயல்பட்ட 5 நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இதையடுத்து, நிறுவன இயக்குனர்கள் உள்பட பலரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, நிதி நிறுவன மோசடிகளை விசாரிக்கும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) நடந்து வருகிறது.
இந்த வழக்கில் ஜாமின் கோரி நிறுவன இயக்குனர் பட்டாபிராம் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு, சிறப்பு நீதிபதி ஜி.கருணாநிதி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில், முதலீட்டாளர்களிடம் 2,425 கோடி ரூபாய் அளவுக்கு சட்ட விரோதமாக பணம் வசூலித்ததில், மனுதாரருக்கு முக்கிய பங்கு உள்ளது என்றும், விசாரணை இன்னும் நிறைவு பெறவில்லை என்றும் 1,08,908 புகார்கள் வந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இயக்குனர் பட்டாபிராமின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் அதிரடி சோதனை... ரூ.3.41 கோடி, 60 சவரன் தங்க நகை பறிமுதல்!!
undefined
குற்றச்சாட்டுக்குப் பின்னர், தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு, ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகளின் 70 வங்கிக் கணக்குகளை முடக்கியதுடன், வர்த்தக நிறுவனமான ஆருத்ராவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களையும் முடக்கியது. சென்னை, அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு பி. ராஜசேகரனால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் சென்னையில் ஆறு கிளைகளைக் கொண்டுள்ளது. திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் வணிகத்தை விரிவுபடுத்தியது. குற்றச்சாட்டை தொடர்ந்து, ஆரூத்ரா கோல்டு நிறுவன இயக்குனர்களான ஜே. பாஸ்கர், பி மோகன்பாபு, உஷா வெற்றிவேல், கே. ஹரிஷ், வி. ராஜசேகர், ஏ செந்தில்குமார், பி. பட்டாபிராமன், எஸ். மைக்கேல்ராஜ் ஆகியோர் மீது பொருளாதார குற்றப்பிரிவு சிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.