கோவையில் காரில் சிலிண்டர் வெடிப்பு எதிரொலி.. பாதுகாப்பு பணியில் அதிவிரைவு படையினர்..!

By vinoth kumar  |  First Published Oct 25, 2022, 3:54 PM IST

கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. கார் முழுவதும் தீயில் எரிந்து கருகியதில், காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். சத்தம் கேட்டு வந்த பொது மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.


கோவை மாநகரில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையுடன் இணைந்து ரேப்பிடு ஆக்சன் ஃபோர்ஸ் என்ற அதிவிரைவு படையினர் கோவை உக்கடம் மற்றும் கண்ணப்பன் நகர் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. கார் முழுவதும் தீயில் எரிந்து கருகியதில், காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். சத்தம் கேட்டு வந்த பொது மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.

Latest Videos

காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறி இருப்பது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும், மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு விசாரணையானது நடத்தப்பட்டது. இதனிடையே காரில் சிலிண்டர் வெடித்த இடத்தில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவரின் அடையாளத்தை காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர். உக்கடம் ஜி.என். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், அவர் பழைய துணி விற்பனை செய்யும் வேலை பார்த்து வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. 2019ம் ஆண்டில் இவரிடம் தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் விசாரணை நடத்தியுள்ளனர். இதையடுத்து கோவை மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற நாட்டு வெடி தயாரிக்க தேவையான பொருட்கள் கைப்பற்றினர். காவல் துறை செக்போஸ்ட் இருந்ததால் அதை தாண்டி தப்பி ஓட முயன்ற போது சிலிண்டர் வெடித்து ஜமேசா முபின் உயிரிழந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர். ஜமேசா முபின் உடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜமேசா முபினின் வீட்டின் அருகே இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் காவல் துறையினர் ஆய்வு செய்தனர். இதில் கடந்த சனிக்கிழமை இரவு 11.25 மணிக்கு ஜமேசா முபின் வீட்டில் இருந்து முபின் உள்ளிட்ட 5 பேர் ஒரு மூட்டையில் பொருட்களை தூக்கிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளைக் கைப்பற்றிய காவல் துறையினர் மற்ற நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை உக்கடம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தீவிர வாகன சோதனையிலும் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிவிரைவு படையினர் கோவைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

click me!