விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம்... அயனாவரம் காவல் ஆய்வாளர் இடமாற்றம்... டிஜிபி அதிரடி உத்தரவு!!

By Narendran SFirst Published Jun 8, 2022, 3:36 PM IST
Highlights

விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கில் சிக்கிய அயனாவரம் காவல் ஆய்வாளர் செல்வராஜ் இடமாற்றம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். 

விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கில் சிக்கிய அயனாவரம் காவல் ஆய்வாளர் செல்வராஜ் இடமாற்றம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் கஞ்சா மற்றும் பட்டாக்கத்தியுடன் வந்ததாக சுரேஷ் மற்றும் விக்னேஷ் ஆகியோரை ஏப்ரல் 18ஆம் உதவி ஆய்வாளர் தலைமையிலான தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தியபோது விக்னேஷிற்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு சந்தேகமான முறையில் உயிரிழந்தார். வலிப்பு வந்து விக்னேஷ் உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், கால்துறையினர் தாக்கியதன் காரணமாகவே விக்னேஷ் உயிரிழந்ததாக குடும்பத்தார் தரப்பில் குற்றஞ்சாட்டிய நிலையில், காவல்துறையினர் துரத்திச் சென்று தாக்கும் சி.சி.டி.வி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக  சிபிசிஐடி விசாரணை நடத்திவரும் நிலையில், காவலர் பவுன்ராஜ், தலைமை காவலர் எம்.ஜி. முனாஃப், சிறப்பு உதவி ஆய்வாளர் எஸ்.குமார், ஊர்க்காவல் படை வீரர் பி.தீபக், ஆயுதப்படை காவலர் பி.ஜெகஜீவன், ஆயுதப்படை காவலர் வி.சந்திரகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் எம்.ஜி. முனாஃப், குமார், தீபக், ஜெகஜீவன், சந்திர குமார் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் மாநகர தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜ், சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் சுதாகர் ஆகியோர் ஆஜராகி, காவல் நிலைய மரணம் தொடர்பான சிபிசிஐடி விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளதாகவும், அதனால் யாருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டனர். இதனை ஏற்ற நீதிபதி ஐந்து பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில் விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கில் சிக்கிய அயனாவரம் காவல் ஆய்வாளர் செல்வராஜ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். விசாரணை வளையத்தில் இருந்த அயனாவரம் காவல் ஆய்வாளர் செல்வராஜ் மேற்கு மண்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

click me!