
திருப்பூர்
திருப்பூரில் சீரான குடிநீர் விநியோகம் செய்யக் கோரி தலையில் வெற்றுக் குடங்களைச் சுமந்துகொண்டு ஆட்சியரிடம் மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது.
இதில், அலகுமலை ஊராட்சியைச் சேர்ந்த மக்கள் தலையில் வெற்றுக் குடங்களை சுமந்துகொண்டு ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். அவர்கள் ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமியைச் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
அதில், “திருப்பூரில் 2–வது வார்டுக்கு உட்பட்டப் பகுதியில் அலகுமலை கிராமம் உள்ளது. எங்கள் பகுதியில் சுமார் 300 வீடுகள் உள்ளன.
எங்களுகு கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் சரியாக வழங்கவில்லை. இது குறித்து பொங்கலூர் ஆணையரிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பக்கத்து ஊர்களுக்கு குடிநீர் சீராக வழங்கப்படுகிறது. எங்கள் பகுதிக்கு மட்டும் குடிநீர் விநியோகம் செய்யாமல் அதிகாரிகள் இழுத்தடிக்கின்றனர்.
இந்த நிலையில் எங்கள் பகுதியில் வீட்டுக்கு ரூ.300 வசூலித்து ஒரு தொகையில் ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ளோம். இருப்பினும் ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் வரவில்லை.
எனவே, எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.