
தூத்துக்குடி
திருவைகுண்டத்தில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் தருவதற்காக நிலத்தடி நீரை திருடுவதைக் கண்டித்து ஊர்வலம் சென்ற தூத்துக்குடி நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கத்தினர் 165 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் வழங்குவதற்காக மாவட்டம் முழுவதும் நிலத்தடிநீர் திருட்டு அதிகமாக நடந்து வருகிறது.
இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, தூத்துக்குடி நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கத்தினர், நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கால்நடைகளுடன் குடியிருப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி, போராட்டத்தில் பங்கேற்பதற்காக நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜா தலைமையில் நேற்று காலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் தெஹலான் பாகவி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், பச்சைத் தமிழன் இயக்க மாநில தலைவர் உதயகுமார், விவசாய சங்க தலைவர் அலங்காரம்,
ஆம் ஆத்மி கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குணசீலன், நாம் தமிழர் கட்சி தென்மண்டல மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் குயிலி, பா.ம.க. மாவட்டச் செயலாளர் லிங்கராஜ், நாம் தமிழர் கட்சி தெற்கு மாவட்டச் செயலாளர் சுப்பையா பாண்டியன் மற்றும் பலர் கால்நடைகளுடன் திருவைகுண்டத்தில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு ஆட்சியர் அலுவலகம் வந்தனர்..
அப்போது, அங்குப் பாதுகாப்பு பணியில் இருந்த திருவைகுண்டம் துணை காவல் கண்காணிப்பாளார் (பொறுப்பு) திபு தலைமையிலான காவலாளர்கள் எந்தவித அனுமதியும் இல்லாமல் ஊர்வலம் செல்ல முயன்றதாக, 165 பேரை கைது செய்தனர்.
அவர்கள் அனைவரையும் திருவைகுண்டத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்து பின்னர் மாலையில் விடுவித்தனர்.