
திருவாரூர்
வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்ற தன் மகனை, அங்கு அடித்து துன்புறுத்துகிறார்கள் என்றும் அவரை மீட்டுத் தர வேண்டும் என்றும் திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த தாய் அழுதபடி கோரிக்கை மனு அளித்தார்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேயுள்ள இஞ்சிகுடியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு சீசல் நாட்டுக்கு தனியார் முகவர் மூலம் கூலி வேலைக்குச் சென்று பல்பொருள் அங்காடியில் பணி செய்து வருகிறார்.
வேலைக்குச் சென்றது முதல் இந்நாள் வரை மூன்று முறை மட்டுமே பணம் அனுப்பியுள்ள நிலையில் சரவணன் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என கடை உரிமையாளரிடம் கேட்டுள்ளார்.
அப்போது, கடையில் ரூ. 5 இலட்சம் பணத்தை கையாடல் செய்துவிட்டதாகக் கூறி ஊருக்கு அனுப்பாமல் சரவணனை கடை உரிமையாளர் அடித்துத் துன்புறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தன்னுடைய மனைவி ராணியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வேலைபார்க்கும் நிறுவனத்தில் தன்னை அடித்து துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார் சரவணன்.
மேலும், தன்னை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டு அழுதுள்ளார்.
இதனையடுத்து, நேற்று சரவணனின் தாயார் கமலவேணி, மருமகள் ராணி மற்றும் உறவினர்களுடன் திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது, “வெளிநாட்டில் சித்தரவதைப்படும் தனது மகனை மீட்டுத் தர வேண்டும்” என்று மாவட்ட வருவாய் அலுவலர் க.சக்திமணியிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
அந்த மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர், “இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உத்தரவாதம் அளித்தார்.