
திருவாரூர்
அனைவருக்கும் 100 சதவீத பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி திருவாரூரில் விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள வல்லூரில் பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வல்லூர் வேளாண்மை விரிவாக்க மையம் அருகில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு, விவசாய சங்க ஒன்றியச் செயலர் (பொ) பி. பரந்தாமன், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய நிர்வாகக் குழு உறுப்பினர் கே.வி. கணேசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோட்டூர் ஒன்றியச் செயலர் க.மாரிமுத்து, விவசாயிகள் சங்க நிர்வாகி எம்.ஆர். முத்துக்கண்ணு, ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர் என்.சிவானந்தம் ஆகியோர் பேசினர்.
கோட்டூர் வேளாண்மை உதவி இயக்குநர் ரவீந்திரன், வேளாண்மை உதவி அலுவலர் செந்தில்குமார், திருமக்கோட்டை காவல் சார்பு ஆய்வாளர் ரவி ஆகியோர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து, மதியம் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொள்கிறோம் என்று விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துவிட்டு அமைதியாக கலைந்துச் சென்றனர்.