
தூத்துக்குடி
அரிதினும் அரிதான தகவல்களைத் தொகுத்து பாரதியாரின் முழுமையான வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டும் என்று மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் பாரதி முற்போக்கு இளைஞர் சங்கம் சார்பில் மகாகவி பாரதியாரின் 96-வது நினைவு நாள் விழா சனிக்கிழமை தொடங்கியது.
இந்த விழாவின் முதல் நாள் நிகழ்ச்சிக்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலர் வழக்கறிஞர் பெ.சந்தனசேகர் தலைமை வகித்தார். பாரதி ஆய்வாளரும் எழுத்தாளருமான இளசை மணியன் முன்னிலை வகித்தார்.
பாரதி இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு பாரதி அன்பர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், பாரதி இல்லத்திலிருந்து பாரதி மணிமண்டபம் வரை மாணவ, மாணவியர், தமிழ் எழுத்தாளர்கள் கலந்துகொண்ட ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தின்போது அனைவரும் பாரதியின் பாடல்களைப் பாடியும், பாரதியின் கருத்துகளை முழக்கமிட்டும் சென்றனர்.
பாரதி மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் எல். ராஜேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, மணிமண்டப விழா அரங்கில் நாகசுர மங்கள இசை, பரதநாட்டியம், தேவராட்டத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கின.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் ஊனர் கல்வி என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நண்பர்கள் உள்ளத்தில் புரட்சியாளர் வாஞ்சிநாதன் என்ற நூலை விழா மேடையில் பேராசிரியர் நா.தர்மராஜன் வெளியிட கீழஈரால் தொன்போஸ்கோ கல்லூரி முதல்வர் அமலஜெயராயன் பெற்றுக் கொண்டார். நூல் ஆசிரியர் இளசை மணியன் ஏற்புரையாற்றினார்.
இந்த விழாவில், மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் சிறப்பு விருந்தினராகக் பங்கேற்றார்.
அப்போது அவர், “பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனாலும்கூட இன்னமும் பாரதி குறித்த முழுமையான வாழ்க்கை வரலாறு வெளிவரவில்லை என்று சொல்லப்படுகிறது. பாரதியார் குறித்து தற்போது வரை முழுமையான ஆய்வுகள் கிடைக்கப் பெறவில்லை என அறிஞர்கள் வட்டாரம் கருதுகிறது.
அறிஞர்கள், திறனாய்வாளர்கள் அடங்கிய பெரிய குழுவை ஏற்படுத்தி, தேடித் தேடிக் கண்டுபிடித்து, அரிதினும் அரிதான தகவல்களைத் தொகுத்து பாரதியாரின் முழுமையான வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டும்.
பாரதியின் கருத்துகள் இந்தக் காலகட்டத்துக்கு மிகவும் தேவையாக உள்ளது. குறிப்பாக, பாரதி குறிப்பிட்ட இரண்டு சொற்கள் நாட்டின் இறையாண்மைச் சொற்கள். அந்தச் சொற்கள் இல்லாமல் நாடுகள் இல்லை. ஒரு சொல் புரட்சி; இன்னொரு சொல் பொதுவுடைமை. இந்த இரண்டு சொற்கள் மூலம் தமிழ் கூறும் நல் உலகுக்கு, தமிழ் மொழிக்குச் செழுமை சேர்ந்த தளகர்த்தர் பாரதியார்.
பாரதியாரை கொண்டாடினால் மட்டும் போதாது. பாரதியின் கருத்துகளை நடைமுறைப்படுத்தி, பாரதியார் கனவு கண்ட தங்கத் தமிழகத்தை, அற்புதமான இந்தியாவை படைப்பதற்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
அதன்பின்னர், பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் பேராசிரியர் பா.ஆனந்தகுமார், கவிஞர்கள் சாகோவி, கந்தசாமி, வேப்பை ராமு, உக்கிரபாண்டி, செம்பை நதிராஜா, கலைமாமணி கைலாசமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பாரதி முற்போக்கு வாலிபர் சங்கச் செயலர் மு.மணிபாரதி நன்றித் தெரிவித்தார்.