காங்கிரஸ் காலத்தை விட பாஜக ஆட்சியில் கைதான மீனவர்களின் எண்ணிக்கை அதிகம் என மத்திய அரசு அளித்துள்ள பதில் மூலம் தெரியவந்துள்ளது
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில், மீனவர்கள் கைது குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய அரசு அளித்துள்ள பதிலில், 20 ஆண்டுகளில் 6658 தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் காலத்தை விட பாஜக ஆட்சியில் கைதான மீனவர்களின் எண்ணிக்கை அதிகம் எனவும் தெரியவந்துள்ளது.
“இலங்கை கடற்படையால் தொடர்ந்து தமிழ்நாடு மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவது பற்றியும் அவர்களை மீட்கவும் அவர்கள் மீதான வன்முறை பிரயோகத்தை தடுக்கவும் ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன?” என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு மத்திய வெளியுறவு இணை அமைச்சர் வி.முரளிதரன் பதில் அளித்துள்ளார். அதன்படி, பாஜக ஆட்சியில் உள்ள 2014 - 24 காலத்தில் 3137 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளனர். 2004 - 2013 காலத்தில் 2915 பேரும், வாஜ்பாய் ஆட்சியில் இருந்த 2003இல் 606 பேரும் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்திய மீனவர்கள் மீது 13 தாக்குதல்களை அண்டை நாடுகளின் கடற்படைகள் தொடுத்துள்ளன. அண்டை நாட்டு சிறைகளில் விடுவிக்கப் படாமல் தற்போது இருப்பவர்கள் 266 பேர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டில் ல் மட்டுமே ஒரு தாக்குதல், கைது கூட இல்லை எனவும் மத்திய அரசு அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழகம்: அறிக்கை மூலம் விஜய் என்ன சொல்கிறார்?
மேலும், கைது, தாக்குதல் பற்றிய தகவல் வந்தவுடன் இந்திய அரசு சார்பாக ராஜீய உறவுகள் வாயிலாக தொடர்பு கொண்டு விடுவிக்க முயற்சிகளை மேற்கொள்ளப்படுகின்றன. தூதரக பணியாளர்கள் சிறைகளுக்கு சென்று கைதிகளின் பாதுகாப்பு, நலம் விசாரிக்கப்படுகின்றன. சட்ட உதவிகள் செய்யப்படுகின்றன. இரு தரப்பு தீர்வு முறைமைகள் உள்ளன. மீனவர் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் பலவந்தம் இல்லாமல் அணுகுமாறு அண்டை நாடுகளின் அரசுகளை கேட்டுக் கொள்வதாகவும் அமைச்சர் அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கூறுகையில், “அரசு புள்ளி விவரங்களையும், வழக்கம் போல அலுவல் ரீதியான வார்த்தைகளை மட்டுமே பிரகியோகித்துள்ளது. அரசியல் உறுதியுடன் நடவடிக்கை தேவைப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் காலத்தை விட பாஜக ஆட்சியில் கைதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது வருந்தத்தக்கது. ஆகவே இரு தரப்பு ஒப்பந்தம் உணர்வு பூர்வமாக நிறைவேற்றப் படுவதை உறுதி செய்ய வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.