
மத்திய அரசு விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அந்த வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கையை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பார்க்கின்றன. மறுபுறம், பாஜகவும் அதிமுகவும் இதை ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்று கூறுகின்றன. எனினும் திமுக தனது முழு ஆதரவை செந்தில் பாலாஜிக்கு வழங்கி உள்ளது. செந்தில் பாலாஜி கைது தொடர்பாக முதலமைச்சர் தொடர்ந்து கண்டித்து அறிக்கை வெளியிட்ட நிலையில், இன்று வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். எனினும் திமுகவின் இந்த வியூகம் சரியாக இருக்குமா என்பது திமுகவிற்குள்ளே கேள்வியாக எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
கைதுக்கு பயந்து செந்தில் பாலாஜி நெஞ்சுவலி என நாடகமாடுகிறார் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து, மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை அறிய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க அனைத்து மாவட்டங்களில் உள்ள உளவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாநில அரசு மீது மத்திய அரசு ஆதிக்கம் செலுத்துகிறதா எனவும் மக்களிடம் கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதே போல் தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கு எப்படி உள்ளது என்பதை அறிய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் திமுக அரசின் செயல்பாடுகள் எப்படி உள்ளது, திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பதை அறியவும் முடிவு செய்துள்ளது. இவை எல்லாம் குறித்து தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் தனித்தனி உளவுத்துறை பொறுப்பாளர்களை நியமித்து ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வுப் பணிகளை உடனே தொடங்குமாறு உளவுத்துறையினருக்கு அறிவுறுத்தி உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் 150 பேரிடம் ஆய்வு நடத்தவும், அவர்களின் தகவல்களை அரசிடம் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு தொடர்பான அறிக்கையை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்கவும் அரசு அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
அதே போல் கடந்த அதிமுக ஆட்சிக்கும், திமுக ஆட்சிக்கும் ஒப்பீடு குறித்து மக்களிடம் கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளதா என்பது குறித்தும் இந்த ஆய்வின் மூலம் அறிய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாவும் கூறப்படுகிறது.
ஜெயலலிதாவுக்கு ரோடு போட்டு அசத்தியவர் ஸ்டாலினுக்கு போடுவாரா? யார் இந்த முத்துசாமி?