நிலத்தை வாங்கவோ அல்லது விற்கவோ அல்லது அதை வைத்து அடமானம் பெறவோ நம்மிடம் முதலில் பட்டா, சிட்டா போன்ற ஆவணங்கள் இருக்க வேண்டும்
நிலம் அல்லது வீடு வாங்கும் போதோ அல்லது விற்கும் போதோ பட்டா, சிட்டா போன்ற வார்த்தைகளை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். நிலத்தை வாங்கவோ அல்லது விற்கவோ அல்லது அதை வைத்து அடமானம் பெறவோ நம்மிடம் முதலில் பட்டா, சிட்டா போன்ற ஆவணங்கள் இருக்க வேண்டும்
பட்டா என்பது என்ன?
பட்டா என்பது ஒரு அசையா சொத்தின் உரிமையாளர் யார் என்பதற்கு வருவாய்த்துறை வழங்கக்கூடிய ஓர் ஆவணமாகும். இது அந்த குறிப்பிட்ட இடத்தின் உரிமைக்கான சட்டப்பூர்வ ஆவணமாகும். நிலத்தின் உரிமையாளர் பெயரில் அரசாங்கத்தால் பட்டா வழங்கப்படுகிறது. உரிமையாளர் பெயர், பட்டாவின் எண்ணிக்கை, புல எண் மற்றும் துணை பிரிவு, மாவட்டம், தாலுகா மற்றும் புல எண் மற்றும் துணை பிரிவு, மாவட்டம், தாலுகா மற்றும் கிராமத்தின் பெயர், நிலத்தின் பரிமாணம் அல்லது பரப்பளவு, வரி விவரங்கள் அதில் இடம்பெற்றிருக்கும்.
சிட்டா என்பது என்ன?
சிட்டா என்பது ஒரு அசையா சொத்து பற்றிய சட்ட வருவாய் ஆவணமாகும். இது அந்தந்த கிராம நிர்வாக அதிகாரி மற்றும் தாலுகா அலுவலகத்தால் பராமரிக்கப்படுகிறது. இந்த ஆவணத்தில் உரிமை அளவு, பரப்பளவு போன்ற விவரங்கள் இடம்பெற்றிருக்கும். நிலத்தின் வகை, நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா என்பதை உறுதிப்படுத்துவதே சிட்டாவின் முதன்மை நோக்கமாகும்.
பத்திரம் என்பது பதிவு துறையில் இருந்து பெறக்கூடிய, ஒரு ஆவணம். ஒருவரிடம் இருந்து வாங்கிய நிலத்தை பதிவு செய்வதே பத்திரம் ஆகும். எனினும் அந்த பத்திரத்தில் விவரங்கள் தவறாக இருந்தால், மூலப்பத்திரத்தில் உள்ள உரிமையாளரின் பெயரே செல்லுபடியாகும்.
பட்டா, சிட்டாவை ஆன்லைனில் எப்படி சரிபார்ப்பது?
வருவாய் சேவைகளுக்காக உருவாக்கப்பட்ட தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://eservices.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்
பட்டா நகலை பார்க்க அல்லது பதிவிறக்கம் செய்ய ‘ நில உரிமை (பட்டா& புலப்படம்/ சிட்டா/ நகர நில அளவை பதிவேடு’ விவரங்களை பார்வையிட என்பதை தேர்ந்தெடுக்கவும்
நீங்கள் ஒரு புதிய பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள். அதில் உங்கள் மாவட்டம் மற்றும் பகுதி வகையை கிராமம்/நகரம் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
பின்னர் சமர்ப்பி என்பதை கிளிக் செய்ய வேண்டும்
அடுத்து, மாவட்டம், தாலுகா, நகரம், வார்டு, தொகுதி, புல எண் துணைப்பிரிவு எண் போன்ற தேவையான விவரங்களை உள்ளிட்டு கேப்சா குறியீட்டை உள்ளிட வேண்டும்.
பின்னர் சமர்ப்பி என்பதை கிளிக் செய்தால் நிலத்தின் விவரங்கள் அடங்கிய சான்றிதழ் ஆன்லைனில் கிடைக்கும்
அந்த சான்றிதழில் நிலத்தின் வகை, கட்டுமான வகை, புல எண், இடம், போன்ற தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.