மாணவி தற்கொலை விவகாரம்..அரசியலுக்காக பொய் விதைக்கின்றனர்- பள்ளி நிர்வாகம்

By Thanalakshmi VFirst Published Jan 26, 2022, 9:06 PM IST
Highlights

அரியலூர் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் சில பிரிவினர் அரசியலுக்காக கையில் எடுப்பதும், பொய்களை விதைப்பதும், களங்கம் விதைப்பதும் பெரிதும் வருத்தம் அளிப்பதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைபள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். மேலும் பள்ளிக்கு அருகில் உள்ள செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் மாணவி தங்கியிருந்து படித்து வந்திருக்கிறார்.இந்நிலையில் கடந்த 9ம் தேதி மாணவி உடல்நலக்குறைவு காரணமாக வாந்தி எடுத்ததாகவும் வயிற்றுவலி என்று கூறியதால் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் பள்ளி நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கபட்டு, மறுநாள் மாணவியின் தந்தை வந்து மகளை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் மாணவிக்கு உடல் நிலை சரியாகாமல் மேலும் மோசமடைந்ததால் கடந்த 15ம் தேதி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு தன்னை பரிசோதித்த மருத்துவர்களிடம் மாணவி , தான் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாகவும், விடுதியில் தன்னை அனைத்து அறைகளையும் தூய்மை செய்ய வேண்டும் என்று வார்டன் கூறியதன் பேரில் ஏற்பட்ட மன உளைச்சலால் பூச்சி மருந்தை குடித்ததாகவும் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு,போலீசார் மாணவியிடம் விசாரித்தனர்.

இதற்கிடையில் மாணவி பேசிய ஒரு வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரலானது. அதில், “என்னை பள்ளி நிர்வாகம் மதமாற்றம் செய்யக் கூறியது. அதற்கு அம்மாவும் அப்பாவும் ஒத்து வராததால், பள்ளியில் என்னை துன்புறுத்தி வேலை வாங்கினர்”என மாணவி பேசியிருந்தாக கூறப்பட்டது. இந்த சூழலில் மாணவி சிகிச்சை பலனின்றி ஜனவரி 19 ஆம் தேதி உயிரிழந்தார். இதுக்குறித்து திருக்காட்டுப்பள்ளி காவல் நிலைய பயிற்சி சார்பு ஆய்வாளர் வாக்குமூலம் பெற்றுள்ளார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விடுதி வார்டன் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் மாணவியின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தார். இதனிடையே வைரலான மாணவியின் வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்த நபரை தொந்தரவு செய்யாமல், மாணவியின் தற்கொலைக்கான உண்மையான காரணத்தை போலீஸார் கண்டுபிடிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 
அதன் அடிப்படையில் தற்கொலைக்கு முன் மாணவி பேசியதாக வெளியான வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு நடைபெற்று வரும் நிலையில், புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளிக்குழுமத்தின் நிர்வாக சபை தலைவி பாத்திமா பவுலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மாணவியின் இறப்பு பள்ளிக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு என்றும், அந்த மாணவி விடுமுறையில் கூட வீட்டிற்கு செல்ல விருப்பமில்லாமல், தங்களோடு தங்கியிருந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

விடுதி காப்பாளர் மீது மாணவி குற்றம் சுமத்தியதாக அறிவதாகவும், எனவே இதுதொடர்பாக சட்ட விசாரணைகளுக்கு பள்ளி நிர்வாகம் எப்போதும் துணை நிற்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் இந்த விவகாரத்தை சில பிரிவினர் அரசியலுக்காக கையில் எடுப்பதும், பொய்களை விதைப்பதும், களங்கம் விதைப்பதும் பெரிதும் வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.மதங்களை கடந்து மனித மாண்பின் அடிப்படையில் செயல்படும் தங்களை கொச்சைப்படுத்துவது மிகவும் வருத்தமளிப்பதாகவும் பாத்திமா பவுலா தெரிவித்துள்ளார்.

click me!