ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணியில் 45-க்கும் மேற்பட்ட முதுமக்கள்தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் திறக்கப்பட்டன
ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில், 17 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த அக்.10-ம் தேதி தொடங்கி, மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ் தலைமையில் அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன.இதற்காக, ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் 3 இடங்களில் 28-க்கும் மேற்பட்ட குழிகள்தோண்டப்பட்டன. இப்பணியில்தற்போது வரை 45 முதுமக்கள்தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சங்க காலத்தில் இங்கு மக்கள் வாழ்ந்த வாழ்விடப்பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தற்போது 3,500 ஆண்டுகளுக்கு முன் இங்கு மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக, இங்கு சுண்ணாம்பு தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தளம் மிகவும் வலிமையாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆதிச்சநல்லூரில் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் திறக்கப்பட்டன. இதில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மண்டை ஓடுகள், பற்கள் வியப்பில் ஆழ்த்தின. தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான முதற்கட்ட பணியாக பரம்பு பகுதியில் அகழாய்வு பணி கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த அகழாய்வு பணியில் ஏராளமான தொல்லியல் பொருட்களும், முதுமக்கள் தாழிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
இவ்வாறு மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ் முன்னிலையில் அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் நேற்று திறக்கப்பட்டன. இதில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மனிதனின் மண்டை ஓடு, கை, கால் எலும்புகள், தாடை, பற்கள் இருந்தன. இவை வியப்பில் ஆழ்த்தின. இத்தகைய தாடை மற்றும் பற்கள் மூலம் ஆதி மனிதனின் காலத்தையும் வாழ்க்கை முறையையும் கண்டுபிடிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
ஆதிச்சநல்லூர் அகழாய்வு இயக்குநரும், திருச்சி மண்டல இயக்குநருமான அருண்ராஜ் கூறும்போது, “ஆதிச்சநல்லூரில் தோண்டப்பட்ட குழிகளை இறுதி செய்து, எந்த குழியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கலாம் என முடிவு செய்து, அதன் மீது கண்ணாடித் தளம் அமைக்கப்படும். மேலும், பிரம்மாண்டமாக செட் அமைத்து, இந்த குழிகளை பாதுகாப்பதற்காக டெண்டர் விடும் பணிகள் தொடங்கி உள்ளன. ஒவ்வொரு ஆய்வாளர்களை அழைத்து, அவர்கள் துறை மூலமாக ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார் அவர்.