
முக்கியமான இரயில் நிலையமாக இருக்கும் அரக்கோணம் இரயில் நிலையத்தில் விரைவில் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில் நகரும் படிக்கட்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று தென்னக இரயில்வே பொது மேலாளர் வஷிஸ்டா ஜோரி கூறினார்.
அரக்கோணம் இரயில் நிலையத்தில் இரயில் பராமரிப்பு பணியாளர் அறை திறப்பு விழா நேற்று நடைப்பெற்றது.
இந்த விழாவிற்கு தென்னக இரயில்வே மேலாளர் வஷிஸ்டா ஜோரி தலைமை வகித்தார், சென்னை கோட்ட மேலாளர் அனுபம் சர்மா முன்னிலை வகித்தார். அரக்கோணம் இரயில் நிலைய மேலாளர் மனோகரன் வரவேற்றுப் பேசினார்.
அரக்கோணம் இரயில் நிலையத்தில் உள்ள எட்டு நடைமேடைகளில் குடிநீர் மற்றும் பயணிகளுக்கு செய்துக் கொடுக்கப்பட்டுள்ள வசதிகளை தென்னக பொது மேலாளர் வஷிஸ்டா ஜோரி பார்வையிட்டு ஆய்வுச் செய்தார். பின்னர் அவர், அலுவலகத்திற்குச் சென்றுக் கோப்புகளை ஆய்வு செய்தார்.
இரயில் பராமரிப்பு பணியாளர் அறையைத் திறந்து வைத்த வஷிஸ்டா ஜோரி, செய்தியாளர்களிடம் கூறியது:
‘இரயில் நிலையங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்தக் கூடுதல் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அரக்கோணம் இரயில் நிலையத்தில் 1 மற்றும் 2–வது நடைமேடைகள் விரிவுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் விரைவில் முடிந்து விடும். அதன் பின்னர் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
அரக்கோணம் இரயில் நிலையம் வளர்ந்து வரும் மிக முக்கியமான இரயில் நிலையமாக திகழ்வதால் பயணிகளின் வசதிக்காக நகரும் படிக்கட்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றுக் கூறினார்.
இந்த விழாவில் இரயில் நிலைய அதிகாரிகள், ஊழியர்கள், இரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள், இரயில்வே காவலாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.