
சீமைக்கருவேல மரங்களை அகற்றியப் பின்னர் அந்த இடத்தில் வேறு வகையான மரக்கன்றுகள் நட்டு அவற்றிற்கு நூறு நாள் வேலை செய்யும் தொழிலாளர்கள் தண்ணீர் ஊற்ற வேண்டும்’ என்று ஆணையர் சதீஷ் தெரிவித்தார்.
நிலத்தடி நீரை உறிஞ்சி வறட்சிக்கு முக்கிய காரணமாக இருக்கும் சீமைக்கருவேல மரங்களை தமிழகம் முழுவதும் அகற்ற வேண்டும் என மதுரை கிளை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி அனைத்து மாவட்டங்களிலும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைப்பெற்று வருகிறது.
சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியை ஆய்வு செய்ய நீதிபதிகள், வழக்கறிஞர்கள் அடங்கிய குழுக்களை நீதிமன்றம் நியமனம் செய்தது. நீதிமன்றம் நியமித்த குழுவினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியை ஆய்வுச் செய்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு தாலுகாவில் இருக்கும் ஆவணியாபுரம், சேத்துப்பட்டு பேரூராட்சி பகுதி, தச்சம்பாடி, நம்பேடு, தேவிகாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான இடங்கள், புறம்போக்கு நிலங்கள், வருவாய் துறைக்கு சொந்தமான இடங்கள், நிலங்கள், பேரூராட்சியில் உள்ள ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகள், சாலையோரப் பகுதிகள் ஆகியவற்றில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நடக்கிறது.
இங்கு சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியை ஆய்வுச் செய்யும் குழுவின் ஆணையர் சதீஷ் நேற்று நேரில் வந்து பார்வையிட்டார்.
பின்னர், பதிவேடுகளை ஆய்வுச் செய்த அவர் அதிகாரிகளிடம் தெரிவித்தது:
‘சேத்துப்பட்டு தாலுகாவில் அனைத்துப் பகுதிகளிலும் சீமைக்கருவேல மரங்களை வேகமாக அகற்ற வேண்டும். இதற்காக விழிப்புணர்வு ஊர்வலம், தொலைக்காட்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சீமைக்கருவேல மரங்களை அகற்றிய பின்னர் அந்த இடத்தில் வேறு வகையான மரக்கன்றுகள் நட வேண்டும். மரக்கன்றுகளுக்கு 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்கள் தண்ணீர் ஊற்ற வேண்டும்’ என்றுத் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது சேத்துப்பட்டு தாசில்தார், ஆரணி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் குமார், வருவாய் ஆய்வாளர் அமுல்ராஜ், கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தபாபு, தேவிகாபுரம் ஊராட்சிச் செயலாளர் சங்கர் உள்பட பலர் உடனிருந்தனர்.