
தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் அரசின் வரைமுறைக்கு கீழ் வரும் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் தற்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் விரிவடைந்து வருகிறது. அந்த அளவிற்கு இது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
தற்போது இந்த திட்டத்தில் தமிழகத்தில் 1.14 கோடி குடும்பத் தலைவிகள் பயனாளிகளாக உள்ளனர். இருப்பினும் பல தகுதியான பெண்கள் இந்த திட்டத்தில் சேராமல் விடுபட்டுள்ளனர். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதி இருந்தும் பலரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. திட்டத்தில் பயன்பெற தகுதி இருந்தும் விடுபட்டவர்களுக்கு தற்போது மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி கலைஞர் மகளிர் உரிமைத்தொகையைப் பெற விரும்புபவர்கள் இன்று முதல் அதற்கான விண்ணப்பங்களை தாக்கல் செய்யலாம். பதிவு செய்ய விரும்புபவர்களுக்கு ரேஷன் அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் இருக்க வேண்டும். மேலும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். தொழில் வரி, ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றை கட்டுபவராக இருக்கக் கூடாது.
குறிப்பாக அரசின் வரையறைக்குள் வரும் நபர்கள் அனைவரும் இத்திட்டத்தில் பயன்பெற அதிக வாய்ப்பு உள்ளது. அவர்கள் தங்கள் விண்ணப்பங்களை மறவாமல் பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.