
தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டியின் வெற்றிக் கோப்பையைத் தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லும் பயணத்தை நெல்லையில் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ஆட்சிக் காலம் விளையாட்டுத் துறைக்குப் பொற்காலமாக உள்ளது. ஒலிம்பிக் செஸ் போட்டி, கார் பந்தயம் போன்ற உலகளாவிய போட்டிகளைத் தமிழ் மண்ணில் நடத்தியது பெருமை. உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி வெற்றி கோப்பை இந்தியாவுக்கு கிடைக்க வேண்டும் என்பதே தனது ஆசை.
கரூர் கூட்டத்தில் நிகழ்ந்த நெரிசல் விவகாரத்தில் முதலமைச்சருக்கு பழிவாங்கும் எண்ணம் இருந்திருந்தால், நடிகர் விஜய்யை நிச்சயம் கைது செய்து சிறையில் அடைத்திருக்க முடியும். முதலமைச்சரின் இந்தக் கருணைமிக்க அணுகுமுறையைச் சாதாரண மக்கள் பாராட்டுகிறார்கள். முதலமைச்சரைச் சிறுமைப்படுத்த நினைப்பவர்கள் தாங்களே சிறுமைப்பட்டுப் போவார்கள். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததற்குக் காரணம் அமித் ஷாவுடன் போடப்பட்ட அரசியல் ஒப்பந்தம்தான்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டிற்கு விரோதமாகச் செயல்படுகிறார். சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் ரூ.2,000 கோடி நிலுவை, புயல் நிவாரணத்திற்காகக் கேட்கப்பட்ட ரூ.37,000 கோடி வழங்காதது, மற்றும் விளையாட்டுத் துறைக்கு குஜராத்திற்கு ரூ.663 கோடி ஒதுக்கிய நிலையில் தமிழ்நாட்டிற்கு ரூ.33 கோடி மட்டுமே ஒதுக்கியது போன்று நிதிப்பகிர்வில் பாரபட்சம் காட்டப்படுகிறது. மேலும், ஏழை மாணவர்களின் கடனைத் தள்ளுபடி செய்யாமல், குஜராத்தைச் சேர்ந்த பெருநிறுவனங்களின் ரூ.16 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்தது ஒன்றிய அரசின் தவறான செயல் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
தேர்தல் ஆணையம் நடுநிலைமை தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டிய சபாநாயகர், ஆணையம் தற்போது பாரதப் பிரதமரின் ஆணையை ஏற்று நடக்கும் நிறுவனமாக மாறிவிட்டது என்றார்.