அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். நில அளவையிடும் பணியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்
அதிமுக ஆட்சி காலத்தில் முக்கிய அமைச்சராக இருந்தவர் தங்கமணி, பத்தாண்டு காலம் அமைச்சராக பதவி வகித்தார். 2011 - 16 ஆண்டு காலகட்டத்தில் தொழில்துறை அமைச்சராகவும், 2016 -21 காலகட்டத்தில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராகவும் பதவி வகித்தார். இவர் அமைச்சராக இருந்த போது மின் துறையில் முறைகேடு நடைபெற்றதாகவும், நிலக்கரி வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாகவும் புகார் கூறப்பட்டது. இதனையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மொத்தம் 69 இடங்களில் சோதனை நடைபெற்றது. அப்போது 2.16 கோடி பணம் மற்றும் 1130 கிலோ தங்க நகைகள் 40 கிலோ வெள்ளி மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்திருந்தது.
இந்தநிலையில் மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நாமக்கல்லில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணி இல்லத்தில் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது தங்கமணிக்கு சொந்தமான பல கோடி ருபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் சரி பார்த்து வருகின்றனர். மேலும் திருச்செங்கோட்டில் உள்ள வீட்டில் வருவாய்,பொதுப்பணித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சொத்து ஆவணங்களை சரிபார்த்தனர். மேலும் நில அளவிடும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து அந்த பகுதியில் ஏராளமான அதிமுகவினர் குவிந்துள்ளனர்.
இதையும் படியுங்கள்
பிரபல கட்டுமான நிறுவனத்தில் ஐடி சோதனை...! 20 இடங்களில் 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் விசாரணை