தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை அவர்கள், ராமேஸ்வரத்தில் இருந்து தற்போது தனது பாதயாத்திரையை துவங்கியுள்ளார். அவர் செல்லும் பாதைகளில், வழிநெடுங்க பாஜக கட்சியின் ஆதரவாளர்கள் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பினை கொடுத்து வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சி இன்று மாலை ராமேஸ்வரத்தில்துவங்கியது, இதில் பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான திரு. அமித் ஷா அவர்கள் கலந்து கொண்டு, இந்த பாதயாத்திரை துவங்கி வைத்தார். பாஜகவில் கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சி உறுப்பினர்கள், திரு. அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பேசினர்.
இந்த நிகழ்வில் இறுதியாக பேசிய அமித்ஷா அவர்கள், தொன்மையான மொழியாம் தமிழ் மொழியில் பேச முடியாமல் போனதற்கு முதலில் நான் உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி தனது உரையை துவங்கினார்.
இந்த பாதயாத்திரை தமிழகத்தில் உள்ள குடும்ப அரசியலை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு பாதயாத்திரை என்று அவர் கூறினார். தமிழ்நாட்டை ஊழலில் இருந்து விடுவிக்க நடைபெறும் ஒரு புனித யாத்திரை தான் அண்ணாமலையின் இந்த பாதயாத்திரை என்றும் அவர் தெரிவித்தார். சுமார் 700 கிலோ மீட்டர் தூரம், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நடை பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் அண்ணாமலை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமரின் 9 ஆண்டு கால சாதனைகளை தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும், நண்பர் அண்ணாமலை கொண்டு செல்லவிருக்கிறார் என்று அமித்ஷா கூறினார். காங்கிரஸ் மற்றும் திமுக என்றாலே சட்டென்று நமது நினைவுக்கு 2ஜி ஊழல் தான் வரும் என்றும், மீனவர்களின் மீதான பிரச்சனைகளுக்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சி தான் காரணம் என்றும் கடுமையான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார்.
நாட்டிலேயே மிகவும் ஊழல் மிகுந்த அரசாக ஸ்டாலின் தமிழக அரசு திகழ்வதாக குறிப்பிட்டார் அவர், பயங்கரவாதத்தை ஒடுக்க விமானப்படை தாக்குதல் மற்றும் சர்ஜிகல் அட்டாக் உள்ளிட்டவற்றை பிரதமர் மோடி தான் நிகழ்த்தினார் என்று கூறினார். தனது மகன் ராகுல் காந்தியை பிரதமராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார் சோனியா காந்தி, அதே போல தனது மகன் உதயநிதியை முதல்வராக ஆசைப்படுகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின், மற்றும் தனது மருமகனை முதல்வராக்க ஆசைப்பட்டு வருகிறார் முதல்வர் மம்தா பானர்ஜி, ஆனால் நமது தலைவர் மோடி மட்டுமே தமிழகத்தையும், இந்தியாவையும் அதிக அளவில் வலுப்படுத்தவும், வளப்படுத்தவும் வேண்டும் என்று நினைக்கின்ற ஒரே தலைவர் என்று கூறினார் அமித் ஷா.
நமது நண்பர் அண்ணாமலை அவர்கள் தனது Twitter பக்கத்தில் ஒரு Tweet போட்டால் போதும், அவர்களது ஆட்சிக்கு பூகம்பம் ஏற்படுகிறது. அவர் பதிவிடும் ஒரு Tweetக்கு இந்த சக்தி இருக்கிறது என்றால், அவர் செல்லுகின்ற இந்த பாதயாத்திரையால் என்ன நடக்கும் என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று ஸ்டாலினை பார்த்து கூறியுள்ளார் அமித் ஷா.
சென்னையில் இயங்கி வரும் மெட்ரோ ரயில் சேவைக்காக சுமார் 73 ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், இது போன்ற பிற ரயில்வே திட்டங்களுக்கு சுமார் 34 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், தமிழகத்தில் இரண்டு Vande Bharath ரயில் சேவைகள் துவங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
இன்று தனது பாதயாத்திரையை தொடங்கி உள்ள அண்ணாமலை அவர்கள், சுமார் ஆறு மாத காலம், தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று, இறுதியாக இந்த பாதயாத்திரை சென்னையில் நிறைவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.