
மத்திய பட்ஜெட் - பாஜக பொதுக்கூட்டம்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த, 2025 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசு பட்ஜெட் தொடர்பாக பாஜகவின் விளக்கப் பொதுக்கூட்டங்களை, தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். மத்திய பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்களில், ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் இருப்பவர்களுக்கு, இனிமேல் வருமான வரி கிடையாது என்று சாமானிய நடுத்தர குடும்பங்களின் நலனை முன்னிறுத்தி அறிவித்துள்ளார் நமது மத்திய நிதியமைச்சர். விவசாயத்தில் பின்தங்கிய 100 மாவட்டங்களை மேம்படுத்த, தான்ய க்ருஷி யோஜனா திட்டம் அறிவித்ததன் மூலம், நாட்டிலேயே வறண்ட நீர்நிலைகள் அதிகமிருக்கும் மாநிலமான தமிழகம் பெரும் பயனடைய வாய்ப்பு கிடைத்துள்ளது.
மக்களுக்கான திட்டங்கள்
கிசான் கடன் அட்டைகள் மூலம் 7.7 கோடி விவசாயிகள், மீனவர்களுக்கு வழங்கப்படும் கடன் உதவி, ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தர MSME நிறுவனங்களுக்கு, ரூ.1.5 லட்சம் கோடி கூடுதல் கடனுதவி வழங்கப்படும் என்ற அறிவிப்பின் மூலம், இளைஞர்களுக்கு சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்புகள் பெருகும். 36 உயிர்காக்கும் மருந்துகளுக்கு சுங்கவரி விலக்கு, மருத்துவக் கல்வி இடங்கள் அதிகரிப்பு, Swiggy, Zomato போன்ற நிறுவனங்களில் பணிபுரிவோருக்கும் மருத்துவக் காப்பீடு, என, மருத்துவத் துறையிலும், அனைவருக்கும் பயனடையும் வண்ணம் நமது மத்திய அரசின் பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்திற்கான வரி பங்கீடு
மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என்று பொய் சொல்கிறார்கள் திமுகவினர். கடந்த நான்கு ஆண்டுகளில், மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கிய நேரடி வரிப்பங்கீடு ரூ. 1,73,734 கோடி. இது தவிர, 100 நாள் வேலைத் திட்டத்துக்கு ரூ. 38,641 கோடி, பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டம் மூலம் விவசாயிகள் வங்கிக் கணக்கில் ரூ.6,209 கோடி, பள்ளி மாணவர்களின் கல்விக்காக ரூ. 5,880 கோடி, குழந்தைகளின் ஊட்டச்சத்துக்கான போஷான் திட்டத்துக்கு ரூ. 2,796 கோடி, தமிழக சுகாதாரத் துறை உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ. 5,753 கோடி, முதியோர் ஓய்வூதியம் ரூ. 2,480 கோடி, வீடுகளுக்குக் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்திற்கு ரூ.5,899 கோடி, கிராமப்புற மக்களுக்கான மோடி வீடு திட்டத்திற்கு ரூ. 3,087 கோடி,
மெட்ரோ ரயில் திட்டம்
2 ஆம் கட்ட சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு ரூ.41,018 கோடி, தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ரூ. 18,155 கோடி என, கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கியது ரூ. 1,31,382 கோடி. இது தவிர, பிற திட்டங்கள் எல்லாம் சேர்த்தால், கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தமிழகம் பெற்றிருப்பது ரூ. 3.50 லட்சம் கோடிக்கும் அதிகம். தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது என்று கூசாமல் பொய் சொல்கிறார்கள் திமுகவை சேர்ந்தவர்கள்.
கூசாமல் பொய் சொல்லுறாங்க
பாராளுமன்றத்தில், தமிழகம் சார்பாகச் சென்றிருக்கும் திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவராவது, தமிழகத்துக்கோ, தங்கள் தொகுதிக்கோ எதுவும் கேட்பதில்லை. தமிழகத்துக்குச் சற்றும் தொடர்பில்லாத, அல்லது, தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக மட்டுமே பாராளுமன்றத்தில் பேசுகிறார்கள் என விமர்சித்தார். மேலும் ஆடம்பர காரில் சென்றால் சாதாரண மக்களின் நிலையை எப்படி தெரிந்து கொள்ள முடியும் என கேள்வி எழுப்பினார். ஒரு மனிதனுக்கு எப்போது வாய்க்கொழுப்பு அதிகரிக்கிறதோ, அப்போதே அழிவு ஆரம்பமாகிவிட்டதாக அர்த்தம். ஆணவத்தின் உச்சத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகிறார். இன்னொரு கட்சியில் யார் தலைவராக இருக்க வேண்டும் என்பதை அவர் முடிவு செய்வாராம்.
அமைச்சர்கள் சிறைக்கு செல்வது உறுதி
பாஜக தலைவராக தொடர்ந்து தொடர முடியாது என்பது எனக்கு தெரியும். பாஜகவை பொறுத்தவரை ஒருவரே பதவியில் நீடிக்க முடியாது. ஆனால் அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் உருவி எடுக்கும் வரை இங்கு தான் இருப்பேன் என தெரிவித்தவர், ஊழல் பெருச்சாளிகள் 35 அமைச்சர்களும் 2026ஆம் ஆண்டில் சிறைக்குச் செல்வதை பார்ப்பதற்கு நான் இங்கு இருப்பேன் இருப்பேன். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என அண்ணாமலை தெரிவித்தார்.