திருச்சி எஸ்.ஆர்.எம். ஹோட்டலை மூட முயற்சிக்கும் திமுக - அண்ணாமலை கடும் கண்டனம்!

By Manikanda Prabu  |  First Published Jun 14, 2024, 3:35 PM IST

திருச்சி எஸ்.ஆர்.எம். ஹோட்டலை மூட முயற்சிப்பதாக திமுக மீது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்


அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, திருச்சி எஸ்.ஆர்.எம். ஹோட்டலை மூடும் முயற்சியில், திமுக அரசு ஈடுபட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, திருச்சியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் எஸ்.ஆர்.எம். ஹோட்டலை மூடும் முயற்சியில், திமுக அரசு ஈடுபட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எஸ்.ஆர்.எம். ஹோட்டல் குழுமத்தின் நிறுவனர் பாரிவேந்தர், பெரம்பலூர் தொகுதியில் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேருவை எதிர்த்துப் போட்டியிட்ட காரணத்துக்காகப், பழிவாங்கும் நடவடிக்கையில் திமுக ஈடுபட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

அரசுக்குச் சொந்தமான இடத்தை, 1994 ஆம் ஆண்டு முறையாக குத்தகை பெற்று, சுமார் 30 ஆண்டுகளாக ஹோட்டல் நடத்தி வரும் எஸ்.ஆர்.எம்.குழுமத்தினை, உடனடியாகக் காலி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவது முற்றிலும் ஜனநாயக விரோதமானது. எஸ்.ஆர்.எம். குழுமத்தால் கட்டப்பட்ட ஹோட்டல் கட்டிடங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பை இடிக்கத் திட்டமிட்டுள்ளதா திமுக அரசு? எஸ்.ஆர்.எம். நிறுவனம், குத்தகைக் காலத்தை நீட்டிக்கக் கோரி மூன்று முறை மனு அளித்தும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புறக்கணித்து வந்திருக்கிறது திமுக அரசு. எனவே இது தொடர்பாக எஸ்.ஆர்.எம்.குழுமம் நீதிமன்றத்திடம் முறையிட்டு, அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கையில், திமுக அரசு உள்நோக்கத்தோடு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். 

திமுக ஆட்சியில், அதன் நிர்வாகிகள் குறுநில மன்னர்கள் போல் செயல்படுவது வாடிக்கையானது. காலாகாலமாக, நில ஆக்கிரமிப்புகளும், கட்டப்பஞ்சாயத்தும், அத்துமீறல்களும், திமுக ஆட்சியின் ஒரு அங்கமாகவே விளங்கி வருகின்றன. ஆட்சி அதிகாரத் திமிரில், அரசியல் காரணங்களுக்காக மற்றவர்களைப் பழிவாங்குவது திமுகவுக்கு வழக்கமானது. 

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாக, கூட்டணிக்கு வரவில்லை என்பதற்காக, மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மண்டபத்தை இடித்துப் பழி தீர்த்துக் கொண்ட திமுக, இன்றும் திருந்தவில்லை என்பதே தற்போது திருச்சி எஸ்.ஆர்.எம். ஹோட்டலைக் கைப்பற்ற நடக்கும் முயற்சி நிரூபிக்கிறது. 

MODI: பிரதமராக பதவியேற்ற பின் முதல் முறையாக தமிழகம் வரும் மோடி?ஸ்டாலினோடு மேடை ஏற திட்டம்.! எதற்காக தெரியுமா.?

கடந்த 2006 – 2011 ஆட்சிக் காலத்தில், இது போன்ற அராஜகச் செயல்பாடுகளால்தான், திமுகவை மக்கள் 10 ஆண்டுகள் தூக்கி எறிந்தார்கள் என்பது சிறிதேனும் நினைவில் இருக்குமேயானால், பொதுமக்களின் வாக்குகள் மீது பயம் இருக்குமேயானால், மீண்டும் அதே போன்ற அநியாயமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள். ஆனால், மக்கள் நலன் குறித்த அக்கறை சிறிதும் இன்றிச் செயல்படும் மூன்று ஆண்டு கால இருண்ட ஆட்சியால், மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என்பது நன்கு தெரிந்ததால், முடிந்த வரை குடும்பத்துக்காகச் சுருட்டுவோம் என்ற நோக்கத்தில் மட்டுமே செயல்படும் திமுக, திருந்த வாய்ப்பே இல்லை என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியிருக்கிறது.

சாமானிய பொதுமக்கள், மாண்புமிகு நீதிமன்றம் மீது கொண்டுள்ள நம்பிக்கையைச் சிதைப்பதைப் போல நடந்து கொள்ளும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். வழக்கு நிலுவையில் இருக்கையில், மாண்புமிகு நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயல்படும் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

click me!