அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பிறந்து 38 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் உட்கோட்டை வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த வீரமுத்து, ரேவதி தம்பதியரின் மகள் சங்கீதா. சங்கீதாவை கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோயில் வடக்கு வீதியில் வசிக்கும் பாலமுருகன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவர்களுக்கு கடந்த 38 நாட்களுக்கு முன்னர் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் சங்கீதா தனது பெற்றோர் ஊரான உட்கோட்டையில் இருந்து வந்த நிலையில் அதிகாலையில் தனது குழந்தைக்கு பசியாற்றி தூங்க வைத்துவிட்டு அவரும் தூங்கி உள்ளார்.
இந்நிலையில், காலை எழுந்து பார்த்தபோது தனது அருகில் படுத்திருந்த குழந்தை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் எங்கும் குழந்தை கிடைக்கவில்லை. இதனையடுத்து வீட்டுக்கு பின்புறம் பார்த்தபோது அங்கு இருந்த தண்ணீர் பேரலில் போர்வையுடன் குழந்தை மூழ்கடிக்கப்பட்டு இறந்த நிலையில் குழந்தை மீட்கப்பட்டது.
உடல்நிலை பாதித்தபோதும் விடாது துரத்திய கடன் தொல்லை; தூய்மை பணியாளர் விபரீத முடிவு
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் சங்கீதா கதறி துடித்துள்ளார். இதையடுத்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்று சிசுவின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு குழந்தையின் இறப்பு குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிறந்து 38 நாட்களேயான ஆண் சிசு தண்ணீர் பேரலில் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து குழந்தையின் தாத்தா, பாட்டியான வீரமுத்து, ரேவதியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.