
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் ஞானேசகரனுக்கு ஆயுள் தண்டனை : அண்ணா பல்கலைகழக வளாகத்தில் மாணவிக்கு மர்ம நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் டிசம்பர் 23 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், நாடே அதிர்ச்சிக்குள்ளாகியது. இதனையடுத்து டிசம்பர் 24ஆம் தேதி மாணவி கோட்டூர் புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து அன்றைய தினமே போலீசாரால் ஞானசேகரன் என்பவன் கைது செய்யப்பட்டான்.
இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் டிசம்பர் 28 ம் தேதி முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஞானசேகரன் மீது ஏற்கனவே பல புகார்கள் உள்ளது. வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து என பல முறை சிறையில் அடைக்கப்பட்டவன் என தெரியவந்தது.
இதனையடுத்து ஞானசேகரன் சிறையில் இருந்து வெளியில் வரமுடியாத வகையில் குண்டர் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் பிப்ரவரி மாதம் 24 ம் தேதி சென்னை சைதாப்பேட்டை 9 வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஞானசேகரனுக்கு எதிராக சுமார் 100 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் மீது மட்டுமே குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. இதில் காவல் துறை தரப்பில் 29 சாட்சிகள் நேரில் ஆஜராகி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர். இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில்
கடந்த மே மாதம் 28ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மகளிர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு அளித்தார். அதில் ஞானசேகரன் குற்றவாளி என அறிவித்தார். அப்போது ஞானசேகரன் மீது 11 குற்றமும் நிரூபணம் ஆகி உள்ளது. அனைத்து வகை சாட்சியின் மூலமாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது குற்றவாளி ஞானசேகரன் தனக்கு தண்டனையை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஆனால் அரசு தரப்போ கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஜூன் 2ஆம் தேதி என்ன தண்டனை என அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்த நிலையில் இன்று நீதிமன்ற வளாகத்திற்கு பலத்த பாதுகாப்போடு புழல் சிறையில் இருந்து ஞானசேகரன் அழைத்து வரப்பட்டார்.
அப்போது நீதிபதி தனது தீர்ப்பை அறிவித்தார். அதன் படி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனையும், 90 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கால கட்டத்தில் எந்தவித சலுகையும் குற்றவாளிக்கு வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.