
ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விமான கட்டணம் : தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இந்த வெயிலின் தாக்கமானது ஆண்டு தோறும் ஜூன் அல்லது ஜூலை மாதம் வரை நீட்டிக்கும். இந்த வெயிலின் தாக்கத்தின் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கி கிடக்கும் நிலை நீடித்தது. இதனையடுத்து பள்ளி தேர்வுகள் முன்கூட்டியே முடிக்கப்பட்டு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. சுமார் 40 நாட்கள் விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வெயிலின் தாக்கத்தை பொறுத்த பள்ளிகள் விடுமுறை நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தகவல் கூறப்பட்டது.
ஆனால் தென் மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்தது. வெயிலின் தாக்கம் குறைந்தது. இதனால் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில பள்ளிகள் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் திறக்கப்படவுள்ளது. இதனையடுத்து வெளியூர் சென்ற மாணவர்கள் சென்னை உள்ளிட்ட சொந்த ஊர்களுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். அந்த வகையில் ரயில்களில் அனைத்து பெட்டிகளிலும் கூட்டம் நிரம்பி வழிவதால் பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர்.
பேருந்து கட்டணமும் விமான கட்டணத்திற்கு இணையாக இருப்பதால் விமானத்தில் பயணிக்கலாம் என டிக்கெட் பதிவு செய்தவர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது விமான நிறுவனர். விமான கட்டணமானது ராக்கெட் வேகத்தில் உச்சத்தில் சென்றுள்ளது. தமிழகத்தில் மதுரை, திருச்சி, தூத்துக்குடி, கோவையில் இருந்து சென்னை வருவதற்கும் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு பயணிப்பதற்கும் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. அந்த வகையில் 3 மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளது.
மதுரையில் இருந்து சென்னைக்கு வர எப்பவும் 4,542 ரூபாயாக இருந்த விமானக்கட்டணம் 18,127 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே போல தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வர 4,214 ரூபாயாக இருந்த விமானக்கட்டணம் 17,401 ரூபாயாக அதிகரித்துள்ளது. திருச்சியில் இருந்து சென்னைக்கு வர 2,334 ரூபாயாக இருந்த விமானக்கட்டணம் 9,164 ரூபாயாக உயர்ந்துள்ளது. கோவையில் இருந்து சென்னைக்கு வர 3,550 ரூபாயாக இருந்த விமானக்கட்டணம் 6,475 ரூபாயாக அதிகரித்துள்ளது.