பாமகவின் கூட்டணி ஆட்சியில் மின்கட்டணம் 25% அளவுக்கு குறைக்கப்படும்.! அடித்து சொல்லும் அன்புமணி

Published : Jun 28, 2025, 12:29 PM ISTUpdated : Jun 28, 2025, 12:33 PM IST
tneb online bill

சுருக்கம்

மகாராஷ்டிராவில் அடுத்த 5 ஆண்டுகளில் மின்சாரக் கட்டணம் 26% குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தமிழ்நாட்டில் கடந்த இரண்டே முக்கால் ஆண்டுகளில் 39.81% மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது தமிழக மக்களுக்குப் பெரும் சுமையாக உள்ளது.

Tamilnadu electricity prices : மராட்டியத்தில் நடப்பாண்டில் தொடங்கி அடுத்த 5 ஆண்டுகளில் மின்சாரக் கட்டணத்தை 26% குறைக்கப் போவதாக அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. அதேநேரத்தில் தமிழகத்தில் ஏற்கனவே 39.81% அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியுள்ள திராவிட மாடல் அரசு, அடுத்த சில நாள்களில் மேலும் 3.16% மின்கட்டண உயர்வை நடைமுறைப்படுத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் நடைமுறைகளுக்கு முற்றிலும் மாறாக, மராட்டியத்தில் வீடுகள், கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து வகை இணைப்புகளுக்குமான மின்கட்டணங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் 26% குறைக்கப்படும்; முதல் கட்டமாக நடப்பாண்டில் 10% கட்டணம் குறைக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சரும், மின்துறை அமைச்சருமான தேவேந்திர பட்னவிஸ் அறிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் மின் கட்டண விகிதம்

மராட்டிய அரசின் இம்முடிவுக்கு அம்மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் ஒப்புதல் அளித்திருக்கிறது. மராட்டிய அரசின் இந்த முடிவு அம்மாநில மக்களிடம் மகத்தான வரவேற்பை பெற்றிருப்பதில் வியப்பில்லை. ஆனால், தமிழ்நாட்டில்....? திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டில், அதாவது 2022&ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அதிகபட்சமாக 52 விழுக்காடும், சராசரியாக 32 விழுக்காடும் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் அந்த நிதியாண்டின் எஞ்சிய 7 மாதங்களில் மட்டும் ரூ.23,863 கோடியும், முழு ஆண்டுக்கும் சேர்த்து ரூ.31,500 கோடியும் மின்வாரியத்திற்கு கூடுதல் வருமானம் கிடைத்தது. 2023&ஆம் ஆண்டு ஜூலை முதல் 2.18 விழுக்காடும், 2024&ஆம் ஆண்டு ஜூலை முதல் 4.83 விழுக்காடும் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது. கடந்த இரண்டே முக்கால் ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 39.81% மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மட்டும் மின்சார வாரியத்திற்கு ஆண்டுக்கு ரூ.41,500 கோடியும், கடந்த இரண்டே முக்கால் ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடிக்கும் கூடுதலாகவும் வாரியத்திற்கு வருவாய் கிடைத்திருக்கக் கூடும்.

இவை மட்டும் போதாது என்று ஜூலை ஒன்றாம் தேதி முதல் 3.16% கட்டணத்தை உயர்த்த மின்வாரியம் முடிவு செய்திருக்கிறது. இதற்கான அறிவிப்பு எந்த நேரமும் வெளியாகும் என்று அழைக்கப்படுகிறது. அதையும் சேர்த்தால் கடந்த 3 ஆண்டுகளில் 42.17%, அதாவது ரூ.45,000 கோடி மின் கட்டணத்தை திமுக அரசு உயர்த்தியிருக்கிறது. இது உண்மையாகவே தமிழக மக்களுக்கு கிடைத்த பெரும் சாபமாகும்.

தமிழகம் - மராட்டியம் மின்கட்டண வேறுபாடு

ஒருவேளை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தமிழ்நாட்டில் திமுக அரசு தொடர்ந்து, இதே அளவில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும், மராட்டியத்தில் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படுவதாகவும் வைத்துக் கொண்டால், அடுத்த ஐந்தாம் ஆண்டின் முடிவில் தமிழ்நாட்டுக்கும், மராட்டியத்திற்கும் இடையிலான மின் கட்டண வேறுபாடு இப்போது இருக்கும் அளவை விட 50% அதிகரித்திருக்கும். தமிழகத்தை ஆளும் திமுக அரசு தமிழ்நாட்டு மக்களை எவ்வாறு சுரண்டுகிறது என்பதற்கு இது தான் சிறந்த எடுத்துக்காட்டு.

தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படுவதற்கும், மராட்டியத்தில் மின்சாரக் கட்டணம் குறைக்கப் படுவதற்கும் முதன்மைக் காரணம் நிர்வாகத் திறன் தான். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நிர்வாகத் திறனை பூதக் கண்ணாடி கொண்டு தான் தேட வேண்டியிருக்கிறது. மராட்டிய மாநில மின்வாரியம் நிர்வாகத்தில் சிறந்து விளங்குகிறது. ஆனால், தமிழ்நாட்டின் நிலைமை முற்றிலும் தலைகீழாக உள்ளது. 2022&23ஆம் ஆண்டில் மட்டும் அனுமதிக்கப் பட்ட அளவை விட 917.6 கோடி யூனிட் மின்சாரத்தை ரூ.13,179 கோடி கூடுதலாக கொடுத்து தமிழ்நாடு மின்வாரியம் வாங்கியிருக்கிறது. சராசரியாக ஒரு யூனிட் ரூ.14.36 என்ற விலைக்கு மின்சாரத்தை வாங்கியது தான் இதற்கு காரணம் ஆகும்.

25% மின் கட்டணம் குறைக்கப்படும்

தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக்கப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, மக்களைச் சுரண்டுவதில் தான் முதலிடம் பிடித்துள்ளது. திமுகவின் கொடுங்கோல் ஆட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று திரண்டு வரும் தேர்தலில் திமுகவுக்கு படுதோல்வியை பரிசாக அளிப்பார்கள். அடுத்து அமையவிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சியில், மின்கட்டணம் குறைந்தபட்சம் 25% அளவுக்கு குறைக்கப்படும்; நேர்மையான நிர்வாகத்தின் மூலம் இதை பாமக சாதிக்கும் என அன்புமணி தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamil News Live today 06 December 2025: Govt Job - ரயில்வேயில் 400 புதிய வேலைகள்! எழுத்துத் தேர்வு எப்போ தெரியுமா?
இந்த ஐந்து நாள் பயிற்சி போய்ட்டு வந்தாலே போதும்! கை நிறைய சம்பாதிக்கலாம்! உங்க லைஃப் டோட்டலா மாறிடும்!