
Arakkonam Electric Train: சென்னையில் இருந்து வேலுரின் காட்பாடி சென்ற மின்சார ரயில் அரக்கோணம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகி இருந்தது. அதாவது 9 பெட்டிகளுடன் இயக்கப்பட்ட ரயில் சித்தேரி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 7 கிமீ தொலைவில் உள்ள அரக்கோணம் அருகே சென்றபோது திடீரென தடம் புரண்டதாகவும் ரயிலின் 3 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கியதாகவும் தகவல் வெளியாயின.
மின்சார ரயில் தடம் புரண்டதா?
தண்டவாளம் உடைந்து இருந்ததால் ரயில் தடம்புரண்டதாகவும், இதை முன்கூட்டியே பார்த்து ஓட்டுநர் ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தன. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு செய்ததாகவும், மின்சார ரயில் தடம்புரண்டதால் சென்னை-காட்பாடி-சென்னை வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தன
ரயில்வே விளக்கம்
இந்நிலையில், மின்சார ரயில் பெட்டிகள் தடம் புரளவில்லை என்றும் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதைக் கண்டறிந்து ரயில் ஒட்டுநர் முன்கூட்டியே ரயிலை நிறுத்தி விட்டதாகவும் ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. அதாவது 'அரக்கோணம் - காட்பாடி இடையேயான ரயில் எண் 66057 MEMU இன் லோகோ பைலட், சித்தேரி நிலையம் யார்டு சாலை 1 லூப் லைனில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதைக் கண்டறிந்தார். இது மணிக்கு 20 கிமீ வேகக் கட்டுப்பாடு கொண்ட அடையாளம் காணப்பட்ட பராமரிப்பு எச்சரிக்கை இடமாகும்.
ரயில் சேவையில் பாதிப்பு இல்லை
லோகோ பைலட் உடனடியாக ரயிலை நிறுத்தினார். பெட்டிகள் ஏதும் தடம் புரளவில்லை. ஒரு மணி நேரத்திற்குப் பிறகு ரயில் சேவைக்கு ஏற்றவாறு பாதை அமைக்கப்பட்டு, ரயில் அதே பாதையில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. சென்னை-காட்பாடி வழித்தடத்தில் ரயில்கள் வழக்கம்போல் இயங்குகின்றன. ரயில் சேவையில் எந்த பாதிப்பும் இல்லை' என ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
புறநகர் ரயில்களின் முக்கியத்துவம்
சென்னையில் கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு, மூர் மார்க்கெட்-திருவள்ளூர்-அரக்கோணம், மூர் மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி மற்றும் கடற்கரை-வேளச்சேரி ஆகிய இடங்களுக்கு புறநகர் மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. சென்னையின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க புறநகர் மின்சார ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சென்னையில் மெட்ரோ ரயில்கள் இருந்தாலும், மிகவும் குறைவான கட்டணத்தில் சரியான நேரத்தில் மக்களை கொன்டு சேர்ப்பதில் புறநகர் ரயில்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.