
தமிழ்நாட்டில் பெரிய கட்சிகளில் ஒன்றான பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையேயான மோதல் பெரும் உச்சத்தை தொட்டது. மேடையிலேயே மோதிக் கொண்ட இருவரும், அதன்பிறகு தங்கள் ஆதரவாளர்களுடன் பொதுக்குழு உள்ளிட்ட கூட்டங்களை நடத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து இருவரும் பாமக தனக்கே சொந்தம் என்று தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர். இரு தரப்பில் இருந்தும் தேர்தல் ஆணையத்துக்கு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதனை ஆராய்ந்த தேர்தல் ஆணையம் பாமகவுக்கு அன்புமணி தரப்பே உரிமை கொண்டாட முடியும் என்று தெரிவித்தது. இதனால் அன்புமணி ஆதரவாளர்கள் குஷியானார்கள்.
இந்த நிலையில், அன்புமணி தான் பாமக தலைவர் என்று ராமதாஸ் தரப்புக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. ''2026ம் ஆன்டு ஆகஸ்ட் 1ம் தேதி வரை அன்புமணி தான் பாமகவின் தலைவர். பாமக நிர்வாகிகள் அன்புமணியை தான் தலைவராக தேர்வு செய்துள்ளனர். அதற்கான தரவுகள் உள்ளன'' என்று ராமதாஸ்க்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளது.
ராமதாஸ் ஷாக்
தேர்தல் ஆணையத்தின் கடிதத்தால் ராமதாஸ் மற்றும் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முன்னதாக, தேர்தல் ஆணையத்தால் அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்த ராமதாஸ் தரப்பை சேர்ந்த ஜி.கே.மணி தேர்தல் ஆணையம் ஜனநாயகப் படுகொலை செய்துள்ளது என்று ஆவேசமாக தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய அவர், ''அன்புமணி தேர்தல் ஆணையத்திடம் போலி ஆவணங்களை கொடுத்துள்ளார். அதை ஏற்று தேர்தல் ஆணையம் அவருக்கு சாதகமாக செயல்படும் வகையில் இப்படி தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
தேர்தல் ஆணையம் ஜனநாயக படுகொலை
அன்புமணியுடன் கூட்டு சேர்ந்து தேர்தல் ஆணையம் ஜனநாயக படுகொலை செய்துள்ளது. அன்புமணி நடத்திய பொதுக்குழு சட்டப்பூர்வமற்றவை. தேர்தல் ஆணையமும், அவரும் சேர்ந்து எங்களை ஏமாற்றியுள்ளார். பாமகவின் தலைவர் ராமதாஸ் தான். தேர்தல் ஆணையத்துக்குப் ராமதாஸ் அனுப்பிய கடிதங்கள் அதற்கு ஆதாரங்களாக உள்ளன'' என்று தெரிவித்தார்.