ஓய்வுபெற்ற தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ்ஸுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், அரசின் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்ட இறையன்பு ஐஏஎஸ் கடந்த மாதம் 30ஆம் தேதி ஓய்வு பெற்றார். இந்திய ஆட்சிப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி அனுபவம் கொண்டிருக்கும் இறையன்பு ஐஏஎஸ் லட்சக்கணக்கான இளைஞர்களின் ஊக்கசக்தியாக திகழ்ந்து வருகிறார். இளைஞர்களுக்கான தன்னம்பிக்கையூட்டும் கட்டுரைகளையும் அவர் தொடர்ந்து எழுதி வருகிறார்.
பணி ஓய்வுக்கு பிறகு, இறையன்புவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த சில பதவிகளை தர முதல்வர் ஸ்டாலின் விருப்பம் காட்டியதாகவும், ஆனால், அதனை அவர் ஏற்க மறுத்து விட்டதாகவும் கூறப்பட்டது. “ஓய்வுக்கு பிறகு என்ன செய்யலாம் என இதுவரை சிந்திக்கவில்லை. இந்த சமுதாயம் என்னை எப்படி பயன்படுத்த விரும்புகிறதோ அதற்கேற்ப செயல்படுவேன். இளஞர்களின் முன்னேற்றம் குறித்து சிந்தித்து வருகிறேன்.” என இறையன்பு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஓய்வுபெற்ற தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ்ஸுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்னை பூமியை காக்கும் பணிகளுக்கு முனைவர் இறையன்பு துணை நிற்க வேண்டும். தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர்களாக பணியாற்றியவர்களில் மக்களுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் சிலர் மட்டும் தான். அந்த சிலரின் குறிப்பிடத்தக்கவர் முனைவர் இறையன்பு. தலைமைச் செயலாளராக இருந்த காலத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் நலனுக்காக உழைத்ததுடன், வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.
அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகள் நடப்படுவதற்கு காரணமாக இருந்தார். புவிவெப்பமயமாதல் என்ற பெருந்தீமை அன்னை பூமியை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழலைக் காக்க வேண்டிய மிகப்பெரிய தேவை ஏற்பட்டிருக்கிறது. அன்னை பூமியை காக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்வதிலும், அதற்கான களப் பணிகளிலும் பசுமைத் தாயகம் அமைப்புடன் இணைந்து செயல்பட முனைவர் இறையன்பு அவர்களை அழைக்கிறேன்; அழைப்பை ஏற்று அவர் முன்வர வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.
புதிய நிற பிரச்சார வாகனத்தில் எடப்பாடி பழனிசாமி..! திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன.?
அதேபோல் மது, புகையிலை, போதைப் பொருட்களின் தீமைகளில் இருந்து இளைஞர்களை காப்பதற்கான பரப்புரையில் இறையன்பு ஈடுபட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக அரசின் தலைமைச் செயலாளராக சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள வெ.இறையன்பு அவர்கள், எந்த அரசு பதவியையும் ஏற்கப் போவதில்லை என்றும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக உழைக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். அவர் எடுத்திருப்பது மிகவும் சரியான முடிவு. அதற்காக அவரை நான் பாராட்டுகிறேன்.
தமிழ்நாட்டின் இளைஞர் சமுதாயம் மது, புகையிலை, போதைப் பொருட்கள் ஆகிய முப்பெரும் அரக்கர்களிடம் சிக்கி சீரழிந்து வருகிறது. முப்பெரும் தீமைகளிடமிருந்து இளைஞர்களைக் காக்க அரசியல்ரீதியாக பாட்டாளி மக்கள் கட்சி போராடிக் கொண்டிருக்கிறது. இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நலனில் அக்கறைக் கொண்டிருக்கும் வெ.இறையன்பு அவர்கள், மது, புகையிலை, போதைப் பொருட்களின் தீமைகளில் இருந்து இளைஞர்களை காப்பதற்காக அவர் வழியில் பரப்புரை செய்ய வேண்டும்; பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அது அவரை வளர்த்தெடுத்த தமிழ்ச்சமூகத்திற்கு அவர் செய்யும் கைம்மாறாக அமையும்.” என்று பதிவிட்டுள்ளார்.